
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தற்போது காற்று வாங்கவும் பொழுது போக்கவும் செல்லும் பொதுமக்கள் ஒரு காட்சியை கண்டுவருகிறார்கள்
அது வடமாநில சிறுமிகள் விற்றுவரும் ‛பாட்டில் லைட்கள்தான்'.
சிறிதும் பெரிதுமான பாட்டில்களுக்குள் மின் விளக்குகள் ஒளிர்கிறது, அந்த ஒளிச்சிதறல் பட்டு உள்ளே உள்ள வண்ண வண்ண சின்ன பந்துகள் தங்கள் வண்ணத்தை கூடுதலாக பிரதிபலிக்கிறது. பார்ப்பதற்கு வித்தியாமாக உள்ள இந்த ‛பாட்டில் லைட்டை' குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விலை பேசி வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ‛பாட்டில் லைட்டுகளின்' பின்னனியில் ஒரு சுவராசியமான கதை இருக்கிறது.

சென்னைக்கு பிழைப்பு தேடிவரும் வடமாநிலத்தவர்களின் குடும்பங்கள் தஞ்சம் அடைந்துள்ள இடங்களில் பெசண்ட்நகர் கடற்கரை பகுதியும் ஓன்று அந்தப்பகுதியில் குடிமகன்கள் குடித்துவிட்டு துாக்கி எறியும் குவார்ட்டர் பாட்டில்களை சேகரித்து சுத்தம் செய்து அதில் சில நாகசு வேலைகள் செய்து அலங்கார மின்விளக்காக மாற்றிவிடுகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளக்குகளை விரும்பிவாங்கிச் செல்கின்றனர்.
‛பாட்டில் லைட்டை' விற்பதற்கு அவர்கள் வீட்டு சிறுமிகளையே பெரிதும் பயன்படுத்துகின்றனர் ,அந்த சிறுமிகளின் ஏழ்மை தோற்றத்தை பார்க்கும் மக்கள் ‛பாட்டில் லைட்டை' அதிகம் பேரம் பேசாமல் வாங்கிக் கொள்கின்றனர், இதன் மூலம் நம்மை நம்பி பிழைக்க வந்த அவர்களது குடும்ப செலவிற்கு கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கிறது.
சிறிய பாட்டில் லைட் என்றால் நுாறு ரூபாயும் பெரிய பாட்டில் லைட் என்றால் இருநுாறு ரூபாய் விலை வைத்து விற்கின்றனர் ஐந்து பத்து குறைத்தோ கூடவோ கொடுத்தாலும் வாங்கிக் கொள்கின்றனர்.ஒரு ‛பாட்டில் லைட்டை' நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு கிடைக்கும் சந்தோஷத்தை விட விற்கும் அந்த சிறுமிக்கு கிடைக்கும் சந்தோஷம் மிக அதிகம் என்பதை வாங்கும் போது நீங்களே உணர்வீர்கள்.
-எல்.முருகராஜ்