பெண் குழந்தைகளின் உடல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு பூப்படைதல். காலம் காலமாக சீர் வைத்து இந்த நிகழ்வை கொண்டாடுவது நம் மரபில் ஒன்று. மஞ்சள் நீராட்டுவிழா என கூறி, தூய்மை, ஆரோக்கியமான உணவு, சுகாதாரம் என அந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வு விழாவாகவும் அப்போது கருதப்பட்டது.
இந்நிகழ்வுக்குப் பின்பு ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே பெண்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும் வாடிக்கையாயிருந்தது அப்போது.. ஆனால், தற்போது உணவு மற்றும் புறச்சூழல்களால் பெண் குழந்தைகள் 10 வயதுக்கு முன்பே கூட பருவம் அடைவது பெருகிவருகிறது. பருவம் அடைவது என்பது பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் அடுத்த கட்ட நகர்வு மட்டுமே என்ற விழிப்புணர்வு பெரும்பான்மையோரிடம் வந்துவிட்ட பிறகு இது போன்ற மஞ்சள் நீராட்டு சடங்குகள் நடத்துவது குறைந்து வருகிறது. இது ஆரோக்கியமான விஷயமே.
தாய்மார்கள் தயங்க கூடாது:

தற்போது பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதால் அவர்களுக்கு முதல் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகும். பெரும்பாலான பெண்களுக்கு தனது முதல் மாதவிடாய் நிகழ்வு அச்சத்தை ஏற்படுத்த கூடும்.
ஹார்மோன் மாற்றதால் ஒரு வித பதட்டம், அழுகை என அதை ஏற்று கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை. அதனால் அந்த பருவம் வரும் முன்னே, இது அனைத்து பெண்களுக்கும் நடக்கும் இயல்பான ஒன்றுதான் என தாய்மார்கள் தயங்காமல் எடுத்து கூற வேண்டும்.
பதற்றத்தை குறையுங்கள்:
பருவம் அடையும் போது நம் அருகில் இல்லாமல், அவர்கள் பள்ளி, மைதானம், உறவினர் வீடு, டியூசன் என எங்கு வேண்டுமானாலும் சென்று இருக்கலாம். அந்த சமயத்தில் ஏற்படும் திடீர் உதிரப்போக்கு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம்.
அப்போது ஒரு சிலருக்கு தாள முடியா அடி வயிற்று வலிக்கூட ஏற்படலாம். இதை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் பெண் பிள்ளைகள் பதட்டத்தில் அழக்கூட செய்வார்கள். இதை முன்கூட்டியே கூறி வைத்திருந்தால், அவர்களுக்குள் புரிதல் ஏற்பட்டு, பதட்டமின்றி முதல் மாதவிடாயை எதிர்கொள்வார்கள்.
அறிகுறிகள் இதுதான்:

பெண்பிள்ளைகளுக்கு பருவமடைவதற்கு முன் சில ஆரம்ப அறிகுறிகள் ஏற்படும். உடல் ரீதியாக பார்த்தால் அந்தரங்கப் பகுதிகளில் ரோமங்கள் வளர துவங்குதல், மார்பகங்கள் பெரிதாகுதல், முகப்பரு வரத் துவங்குதல், மார்பகங்களில் வலி, முதுகு வலி, சோர்வு, வெள்ளைப்படுதல், உடல் எடை அதிகரித்தல் போன்றவை காணப்படும்.
சில குழந்தைகளுக்கு மன ரீதியாக மாற்றம் வரும். நண்பர்களுடன் விளையாடுவதை குறைத்து கொண்டு, சற்று தனிமைப்படுத்தி ஒதுங்கி நிற்பது, உணவு பழக்கத்தில் மாற்றம், இனிப்புகள் மீது அதிக ஆர்வம் ஆகியன தென்படலாம்.
யாரிடம் சொல்வது:

ஒவ்வொரு பெண்பிள்ளைக்கும் பருவமடைவது ஒரு மைல்கல். இந்த மாற்றங்கள் குறித்து பெற்றோர் அவர்கள் பத்துவயதை கடந்த பிறகு கற்றுக்கொடுக்கத் துவங்கலாம். திடீரென்று உதிரப்போக்கு வந்தால் அச்சபடாமல் அதை யாரிடம் கூறவேண்டும் என அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள். உதரணமாக, பள்ளி ஆசிரியர், அத்தை, சித்தி போன்ற உறவினர்கள்.
சானிடரி நாப்கின் கொடுங்கள்:

ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன், அவர்களின் பையில் எப்போதும் சானிடரி 'பேட்' கொடுங்கள். அதை பயன்படுத்துவது குறித்தும் விளக்குங்கள். மேலும் பெண்குழந்தைகள் அச்சமயத்தில் கேட்கும் பல கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளியுங்கள்.
முதல் மாதவிடாய் ஏற்படும் போதும், அதற்கு பின்பும் தாயின் உதவி, அரவணைப்பு அதிகம் தேவை. முதல் மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிடாய், சரியான சுழற்சியில் இருக்காது. இதனால், அவர்கள் அதை சரியாக பின்பற்றுவது சிரமம். அவர்களை பக்குவமாக வழி நடத்துவதில் மிகவும் கவனம்காட்டவும். மாதவிடாயை துணிச்சலுடன் எதிற்கொள்ள பழக்குங்கள்.