வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனான கோபால கிருஷ்ணன் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிட மறுத்துள்ளார். இதனால், பொது வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என முடிவெடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன.
ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஜூலை 18ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள்ளாக வேட்பாளரை அறிவிக்க பா.ஜ., ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
பா.ஜ., கூட்டணி வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என மேற்குவங்க முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் 13 எதிர்க்கட்சிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தின. இதில், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முன்மொழியப்பட்டன. ஆனால், இருவரும் அதனை ஏற்க மறுத்தனர். சில கட்சிகள் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க மாநில முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தியின் பெயரை பொது வேட்பாளராக நிறுத்த பரிசீலித்தன.

ஆனால், தற்போது கோபாலகிருஷ்ண காந்தியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛மிக உயர்ந்த பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், எதிர்க்கட்சியின் வேட்பாளர் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒருவராக இருக்க வேண்டும்' எனக் கூறியதுடன் தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோபாகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அனைவரும் ஆதரிக்கும் வகையிலான பொது வேட்பாளரை நிறுத்தலாம் என கணக்குப்போட்ட எதிர்க்கட்சிகள், தற்போது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய திண்டாடி வருகின்றன.