சென்னை :தமிழகத்தில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், வழக்கம்போல் மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
மாணவர்களை விட பிளஸ் 2வில், 5.36 சதவீதம்; 10ம் வகுப்பில், 8.55 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டுகளை போல, அரசு பள்ளிகளை பின்னுக்கு தள்ளி, தனியார் பள்ளிகள் 'ஓஹோ' என்ற வகையில், தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளன. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, கொரோனா ஊரடங்கால், 2021ம் ஆண்டும்; 10ம் வகுப்புக்கு, 2020, 2021ம் ஆண்டும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்தாண்டு இரண்டு வகுப்புகளுக்கும், குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள்
இதன் முடிவுகளை, தமிழக அரசு தேர்வுத் துறை நேற்று வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2வில் 93.76; 10ம் வகுப்பில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு, 100 சதவீத தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, பிளஸ் 2வில் 6.24 சதவீதம்; 10ம் வகுப்பில் 9.93 சதவீதம் தேர்ச்சி குறைந்து உள்ளது.'ஆல் பாஸ்' செய்யப்பட்ட ஆண்டுகளை தவிர, மற்ற ஆண்டுகளை போல, பொது தேர்வில் மாணவர்களை விட மாணவியரின் தேர்ச்சி, 10ம் வகுப்பில் 8.55 சதவீதமும்; பிளஸ் 2வில் 5.36 சதவீதமும் அதிகரித்துள்ளது.
மாணவியர் முன்னிலை
பத்தாம் வகுப்பில், மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 9.13 லட்சம் பேர்; அவர்களில், 4.53 லட்சம் மாணவியர்; 4.60 லட்சம் மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் அடங்குவர்.தேர்வு எழுதியவர்களில், 90.07 சதவீதமான 8.22 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் மாணவியர், 94.38 சதவீதமான 4.27 லட்சம்; மாணவர்கள் 85.83 சதவீதமான 3.95 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 8.55 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புக்கு 2020, 2021ல் பொதுத் தேர்வு நடத்தாமல், 100 சதவீதம் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். அதை ஒப்பிட்டால், இந்த ஆண்டு தேர்வு நடத்தியதில், 9.93 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. இதற்கு முன், 2019ல் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 95.2 சதவீதமான 8.92 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அரசு பள்ளிகள் பின்னடைவு
பத்தாம் வகுப்பில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி கடைசி இரண்டு இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. அதாவது, தனியார் சுய நிதி பள்ளிகளான மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 98.31 சதவீதம் அதிக தேர்ச்சி
பெற்றுள்ளன. அரசு பள்ளிகளுக்கு 85.25 சதவீதமே தேர்ச்சி கிடைத்துள்ளது. அவற்றில் ஆண்கள் பள்ளிகள் 79.33 சதவீதமும்; பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதமும்; இருபாலர் படிக்கும் பள்ளிகளில் 90.37 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துஉள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 89.01 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி விபரம்
பிளஸ் 2வில் 4.22 லட்சம் மாணவியர்; 3.84 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 8.06 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 93.76 சதவீதமான 7.56 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவியர் 96.32 சதவீதமான 4.06 லட்சம் பேரும்; மாணவர்கள் 90.96 சதவீதமான 3.50 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.36 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தாமல், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தியதில், 6.24 சதவீதம் தேர்ச்சி குறைந்துஉள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பொதுத் தேர்வில், 7.99 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அதில், 92.3 சதவீதமான 7.20 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2020ம் ஆண்டு முடிவுடன், இந்த ஆண்டின் முடிவை ஒப்பிட்டால், 1.46 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
தனியார் பள்ளிகள் 'டாப்'
பிளஸ் 2 தேர்வின் தேர்ச்சி சதவீதத்தை கணக்கிட்டால், தனியார் சுயநிதி மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 99.15 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னணியில் உள்ளன.
பெண்கள் பள்ளிகள் 96.37 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும்; அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும்; இருபாலர் பள்ளிகள் 94.05 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும்; அரசு பள்ளிகள் 89.06 சதவீதம்; ஆண்கள் பள்ளிகள் 86.60 சதவீதம் பெற்று, கடைசி இடங்களில் உள்ளன.
3 மாவட்டங்களின் ஆதிக்கம்
பத்தாம் வகுப்பில், கன்னியாகுமரி மாவட்டம், 97.22 சதவீதத்துடன் மாநிலத்தில் முதலிடத்திலும்; பெரம்பலுார் 97.15 சதவீதம்; விருதுநகர் 95.96 சதவீதம் பெற்று, இரண்டு, மூன்றாம் இடங்களை பெற்றுள்ளன. வேலுார் மாவட்டம் 79.87 சதவீதம் பெற்று, கடைசி இடத்தில் உள்ளது.
பிளஸ் 2வில், பெரம்பலுார் மாவட்டம் 97.95 சதவீதத்துடன் மாநிலத்தில் முதலிடத்திலும்; விருதுநகர் 97.27; கன்னியாகுமரி 97.02 சதவீதம் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களிலும் தேர்ச்சி பெற்றுஉள்ளன. வேலுார் மாவட்டம், 86.69 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 இரண்டு வகுப்புகளிலும், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
வேலுார் மாவட்டத்தை பொறுத்தவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு தேர்ச்சியிலும் மாநிலத்தின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
* சென்னையில், 10ம் வகுப்பில், 23 ஆயிரத்து 352 மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட, 45 ஆயிரத்து 562 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 21 ஆயிரத்து 738 மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட, 40 ஆயிரத்து 439 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 88.76 சதவீதம்
* பிளஸ் 2வில், 24 ஆயிரத்து 208 மாணவியர் உள்பட, 45 ஆயிரத்து 704 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 23 ஆயிரத்து 366 மாணவியர் உள்பட, 42 ஆயிரத்து 958 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 93.99 சதவீதம்
* புதுச்சேரியை பொறுத்தவரை, 10ம் வகுப்பு பொது தேர்வில், 6,793 மாணவியர் உள்பட, 13 ஆயிரத்து 833 பேர் தேர்வு எழுதி, 93.45 சதவீதமாக, 12 ஆயிரத்து 927 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2வில், 6,351 மாணவியர் உள்பட, 12 ஆயிரத்து 254 பேர் பங்கேற்று, 96.74 சதவீதமான, 11 ஆயிரத்து 855 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE