வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு : ''அரசு மேற்கொள்ளும் சீர்திருத்தங்களும், எடுக்கும் முடிவுகளும் தற்போதைய சூழலில் விரும்பத் தகாததாக தெரியலாம்; ஆனால் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு இந்த சீர்திருத்தங்களும், முடிவுகளும் மிகப் பெரிய பலனைத் தரும்,'' என, 'அக்னிபத்' திட்டம் குறித்து பிரதமர் மோடி மறைமுகமாக பேசினார்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று வந்தார். இங்கு பெங்களூரு அருகே நடந்த பொது நிகழ்ச்சியில், 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 19 திட்டங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
![]()
|
விழாவில் பிரதமர் பேசியதாவது: பெங்களூரில் 40 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்களை, இரட்டை இன்ஜின் அரசுகளால் 40 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். அது கண்டிப்பாக சாத்தியமாகும். 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் ஒரே நாளில் துவக்கி வைத்த இந்நாள், பெங்களூரு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.
ரயில், சாலை, துறைமுகம், விமான நிலையம் என போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தும் இத்திட்டங்களால், நீண்ட நாள் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியும் பெருகும். இதன் மூலம் தனியாரை எதிர்க்கும் மனநிலை கொண்டவர்களுக்கு, பெங்களூரு இளைஞர்கள் எதிர்காலத்தில் தக்க பதிலடி கொடுப்பர்.
நாட்டின் நலனுக்காக மத்திய அரசு தற்போது பல்வேறு சீர்திருத்தங்களையும், முக்கிய முடிவுகளையும் எடுக்கிறது. இவை தற்போதைய சூழலில் விரும்பத் தகாததாக தெரியலாம். ஆனால் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பலனைத் தரும். நல்ல நோக்கத்துடன் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த சீர்திருத்தங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது. தங்களின் டி.ஆர்.பி., தரம் அதிகரிப்பதற்காக, ஊடகங்களும் இந்த விவகாரத்தை பெரிது படுத்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
ராணுவத்தில் செயல்படுத்தப்படும் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி மறைமுகமாக இவ்வாறு பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.