வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால் : பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குருக்கு துபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்து, மத்திய பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம.பி.,யில், போபால் லோக்சபா தொகுதியின் எம்.பி., பிரக்யா தாக்குர். இவருக்கு சமீபத்தில் மொபைல் போன் வாயிலாக ஒரு மிரட்டல் வந்தது. அதில் பேசிய நபர், தன்னை மும்பை நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத் இப்ராகிமின் உறவினர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அவர், முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதால், பிரக்யாவை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பிரக்யா சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
![]()
|
இந்நிலையில் இது குறித்து ம.பி., போலீசார் கூறியதாவது: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயிலிருந்து, பிரக்யா தாக்குருக்கு போனில் மிரட்டல் வந்ததாக தெரிகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம். இதே நபரிடமிருந்து தான், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மருமகளும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அபர்ணாவுக்கும் மிரட்டல் வந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். மிரட்டல் விடுத்தவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.