புதுடில்லி :''தேசப் பாதுகாப்பின் ஒரு அங்கமாக, 'சைபர் செக்யூரிட்டி' எனப்படும் கணினி சார்ந்த செயல்பாடுகளின் பாதுகாப்பு உள்ளது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துஉள்ளார்.
நடவடிக்கை
டில்லியில், 'சைபர் பாதுகாப்பும் தேசப் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் மாநாடு நடந்தது. இதில் அமித் ஷா பேசியதாவது:இந்தியாவில் தொழில்நுட்ப பயன்பாடு கடைக்கோடி மனிதரையும் சென்றடைந்துள்ளது. அதனால், கணினி செயல்பாடுகளின் பாதுகாப்பை நாம் உறுதி செய்யாவிட்டால், நாடு மிகப் பெரிய சவாலை சந்திக்க நேரிடும்.
இவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தி இருப்பதால் தான் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாயிருக்கிறது. தேசப் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த அம்சமாக கணினி செயல்பாடுகளின் பாதுகாப்பு உள்ளது. அதை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2020ல் கணினி சார்ந்த குற்றங்களின் எண்ணிக்கை 3,377 ஆக இருந்தது.
60 கோடி பேர்
![]()
|
இது, 2020ல் 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சைபர் குற்றங்கள் மேலும் அதிகரிக்கும். எனவே, அதை சமாளிக்க தேவையான பாதுகாப்பையும் நாம் அதிகரிக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன், கணினி சார்ந்த குற்றங்கள் பற்றிய புகார்களை தெரிவிக்க தனி வலைதளம் துவங்கப்பட்டது. அதில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன. தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, 2014க்கு முன், 60 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு துவக்குவதை கூட நாம் சிந்தித்திருக்க முடியாது. இன்று அது சாத்தியமாகிஉள்ளது. அரசின் ரொக்க உதவி, ஊழலுக்கு வழியில்லாமல் நேரடியாக பயனரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இது, இந்தியா போன்ற நாட்டிற்கு மிகப் பெரிய புரட்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.