வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : 'இந்தியன் வங்கியின் புதிய ஆட்சேர்ப்பு விதிகள், பெண்களுக்கு எதிராக உள்ளது. எனவே, அதை திரும்பப் பெற வேண்டும்' என, டில்லி பெண்கள் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
மருத்துவ சான்றிதழ்
இந்தியன் வங்கியில், புதிதாக பணியில் சேர்பவர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு விதிகளை, வங்கி நிர்வாகம் மறுசீரமைத்து வெளியிட்டது. இதில், 'வங்கிப் பணிக்கு தேர்வான பெண்கள், உடற்தகுதி சோதனையின் போது, 12 வாரங்களோ அல்லது அதற்கு மேலோ கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால், அவர் பணியில் சேர்வதற்கான தகுதியை தற்காலிகமாக இழக்கிறார்.
'குழந்தை பிறந்து ஆறு வாரங்களுக்கு பின், அங்கீகரிக்கப்பட்ட டாக்டரிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்று, வங்கியின் உடற்தகுதி பரிசோதனையில் மீண்டும் பங்கேற்ற பின்னரே, பணியில் சேர தகுதி பெறுவர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியின் இந்த புதிய ஆட்சேர்ப்பு விதிகளுக்கு, பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.டில்லி பெண்கள் கமிஷன் தலைவர் சுவாதி மாலிவால், இந்தியன் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் விபரம்:இந்த புதிய விதி பாரபட்சமானது;சட்டத்துக்கு விரோதமானது. சமூக பாதுகாப்பு குறீயீட்டின் கீழ் அளிக்கப்பட்டுள்ள மகப்பேறு பலன்களுக்கு முரணானது.
![]()
|
ஒப்புதல்
கர்ப்பத்தை காரணம் காட்டி, பெண்கள் பணியில் சேருவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் வாயிலாக, அவர்கள் பணியில் சேருவது தாமதமாவதுடன், பணி மூப்பையும் இழக்க நேர்கிறது.எனவே, பெண்கள் நலனுக்கு எதிரான இந்த புதிய ஆட்சேர்ப்பு விதியை திரும்பப் பெற வேண்டும்.
மேலும், இது போன்ற கொள்கை எவ்வாறு உருவாக்கப்பட்டது; அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரி யார் என்பது போன்ற விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கும், டில்லி பெண்கள் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
சட்டவிரோத விதி
அதில், 'பெண்களை பாரபட்சத்துடன் நடத்தும் இது போன்ற சட்டவிரோத விதிகளை வகுக்கக் கூடாது' என, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட கோரப்பட்டுள்ளது. டில்லி பெண்கள் கமிஷனை தவிர, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட, பல்வேறு பெண்கள் அமைப்பு களும், இந்த விவகாரத்துக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி வருகின்றன.