வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் உருவானதற்கு ஓ.பி.எஸ்., செய்த சில காரியங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதிமுக.,வில் சில நாட்களுக்கு முன்பு வரை, ஒற்றை தலைமை என்ற பேச்சு எழவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் இ.பி.எஸ்.,க்கு ஆதரவாக ஓங்கி ஒலிக்கிறது. ஏன் இந்த திடீர் கோரிக்கை என்று கட்சியினர் சிலரிடம் பேசிய போது, அவர்கள் கூறியதாவது:

முதல் காரணமாக கூறப்படுவது, சசிகலாவை அ.தி.மு.க.,விற்குள் கொண்டு வருவதற்கு ஓ.பி.எஸ்., செய்த மறைமுக முயற்சி. மனம் திருந்தி வந்தால் சசிகலாவை ஏற்று கொள்வோம் என்று அவர் கொடுத்த பேட்டியை அ.தி.மு.க.,வில் பலர் ரசிக்கவில்லை. இ.பி.எஸ்., சுத்தமாக ரசிக்கவில்லை.
இன்னொரு காரணமாக கூறப்படுவது, ஓ.பி.எஸ்., சின் தம்பி ராஜா பகிரங்கமாக சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தது. இதன் பிறகு ராஜா அ.தி.மு.க.,வை விட்டு நீக்கப்பட்டாலும் சசிகலா - ராஜா சந்திப்பின் பின்னணியில் ஓ.பி.எஸ்., இருப்பதாக கட்சியினர் சந்தேகப்பட்டனர். மறைமுகமாக இ.பி.எஸ்.,க்கு ஓ.பி.எஸ்., சவால் விடுகிறார் என்றே கட்சியினரால் கருதப்பட்டது.

மூன்றாவது முக்கிய காரணம், முதல்வர் ஸ்டாலினை ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத் ரகசியமாக சந்தித்து தி.மு.க., ஆட்சியையும் பாராட்டி பேசியது. இந்த தகவல் வெளியே கசிந்ததும், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அ.தி.மு.க.,வின் ஜென்ம விரோதியான தி.மு.க.,வின் தலைவரையும் சந்தித்து, பாராட்டியும் பேசியதை பலரால் ஜீரணிக்க முடியவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இ.பி.எஸ்., கடினமாக தி.மு.க.வை எதிர்த்து பேசி, தட்டிக் கேட்டு வந்த நிலையில் தி.மு.க., வை ஓ.பி.எஸ்.,தடவிக் கொடுத்தது கட்சியினரின் விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல பா.ஜ.,விடமும் ஓ.பி.எஸ்., தனிப்பாசம் காட்டுவதாக இன்னொரு பேச்சு பலமாக அடிபட்டது.
இப்படி சசிகலாவும் வேண்டும், ஸ்டாலினும் வேண்டும் , பா.ஜ.,வும் வேண்டும், அ.தி.மு.க.,வும் வேண்டும் என்று நான்கு குதிரைகளின் மேல் ஒரே நேரத்தில் ஒ.பி.எஸ்., சவாரி செய்ய முயற்சித்தது அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது.
ஓ.பி.எஸ்.,ஐ நம்பி கட்சியை நடத்த முடியாது என்று அ.தி.மு.க., விசுவாசிகள் பலர் கருத துவங்கினர். இந்த காரணங்கள் எல்லாம் சேர்ந்து ஓ.பி.எஸ்., ஐ அ.தி.மு.க.,விற்குள் ஓரம்கட்ட வைத்துவிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE