நடப்பாண்டுக்குள் இந்தியாவை சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று குடியேற தயாராகி வருவதாக ஹென்லி குளோபல் சிட்டிசன்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய தொழிலதிபர்கள், விமானத்தில் பறக்க தயாராக உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் உள்ளன. சீனாவின் கட்டுப்பாட்டில் அதிகரித்து வரும் நெருக்கடியால், ஹாங்காங்கும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனும், டாப் 5 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உயர்ந்த வாழ்க்கைத் தரம், சிறந்த கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், மேலும் இந்தியாவில் உள்ள கடுமையான சொத்து, தனிநபர் வரியை செலுத்துவதில் இருந்து விடுபடுதல் போன்ற காரணங்களால், இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடு செல்ல விரும்புவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக கோடீஸ்வரர்களின் இடப்பெயர்வு மதிப்பாய்வு 2022 அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் : -
இந்தியாவிற்கு கோடீஸ்வரர்களின் இழப்பு மிகப்பெரிய கவலையளிக்க கூடியதல்ல. ஏனெனில் இடம்பெயர்வதால் இழந்த கோடீஸ்வரர்களை விட, புதிய கோடீஸ்வரர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி வருகிறது. உள்ளூர் நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் ஏற்படும் வலுவான வளர்ச்சியால், 2031ம் ஆண்டுக்குள் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இது இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பணக்கார சந்தைகளில் ஒன்றாக மாற்றும்.
அதேநேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உலக செல்வச்செழிப்பின் மையமாக உருவெடுத்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தவிர, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, போர்ச்சுகல், கிரீஸ், கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், கோடீஸ்வரர்களின் தேர்வு பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.
ஐரோப்பிய யூனியன், துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் குடியேற விரும்புவதற்கு, வரி விதிப்பு மற்றும் வலிமையான பாஸ்போர்ட் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மேலும் ஐ.டி, துறையை சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் குடும்ப அலுவலகங்களை அமைப்பதற்கும் சிங்கப்பூர் விரும்பத்தக்க இடமாக கருதுகின்றனர். எளிமையான விசா நடைமுறை மற்றும் பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதால் துபாய் கோல்டன் விசா, வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
மற்ற முதலீட்டாளர்கள் ஐரோப்பிய யூனியன் மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளான குறிப்பாக போர்ச்சுகல், மால்டா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகள் பக்கம் திரும்பியுள்ளனர். உயர்ந்த வாழ்க்கைத்தரம், குறைந்த இடவசதி போன்றவை முக்கியமென கருதும் இந்திய குடும்பங்கள், தொழிலுக்கு முன்னுரிமை அளிப்போர், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு நுழைய, இது நுழைவுச்சீட்டாக உதவும். எதிர்கால முதலீட்டாளர்கள் அதிகளவில் விரும்பும் நகரமாக துபாய் விளங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE