இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி.,யில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 2028ல் ரூ.38 லட்சம் கோடியாக இருக்கும் என இந்தியன் பிரான்ட் ஈக்விட்டி அமைப்பின் அறிக்கையில் கணித்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளான துறைகளில் சுற்றுலாத் துறை முதலிடத்தில் உள்ளது. கடந்த 2020 மற்றும் 2021ல் சுற்றுலாத் துறை உலகளவில் 4.5 லட்சம் கோடி டாலர் அளவில் மாபெரும் இழப்பை சந்தித்தது. தற்போது கோவிட் அலைகள் ஓய்ந்து மெல்ல அத்துறை வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது. உலக சுற்றுலா கவுன்சில் மதிப்பீட்டின் படி 2019 உடன் ஒப்பிடும் போது உள்நாட்டு பயணிகள் செலவிடுவது 45% குறைந்துள்ளது. வெளிநாட்டு பயணிகள் செலவிடுவது 69.4% குறைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியன் பிரான்ட் ஈக்விட்டி அமைப்பின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்திய ஜி.டி.பி.,யில் சுற்றுலாத் துறையின் நேரடி பங்களிப்பு 2019 முதல் 2028 வரையிலான காலத்தில் 10.3% வருடாந்திர வளர்ச்சி விகிதம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கின்றனர். 2020ல் இந்திய ஜி.டி.பி.,யில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு சுமார் ரூ.9 லட்சம் கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2028ம் ஆண்டுக்குள் ரூ.38 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளனர்.

ஜனவரி முதல் மார்ச் 2022 வரை, உள்நாட்டு விமான நிறுவனங்களில் 2.4 கோடி பேர் பயணித்துள்ளனர். இது வருடாந்திர அளவில் ஒப்பிடும் போது 6% வளர்ச்சி ஆகும். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஓய்வுக்காக பயணிப்பது, தொழிலுக்காக பயணிப்பது, கண்காட்சிகளில் பங்கேற்க பயணிப்பது, திருமணங்களுக்கென பயணிப்பது போன்றவை அதிகரித்துள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகையும் கணிசமாக கூடியுள்ளது. பயணங்கள் அதிகரிப்பால் தங்கும் விடுதிகள் முன் பதிவும் அதிகரித்தன.