கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேற்கொள்ளும் பாதயாத்திரை திட்டத்திற்கு, அமலாக்கத் துறை முட்டுக்கட்டை போடலாம் என தெரிகிறது.
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்கு சொந்தமான நிறுவன சொத்துக்களை, 'யங் இந்தியா' என்ற நிறுவனத்தின் வாயிலாக முறைகேடாக கையகப்படுத்தியதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையினர், ராகுலிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், நாடு முழுதும் மாநில வாரியாக சுற்றுப்பயணம் செல்ல, ராகுல் திட்டமிட்டுள்ளார்.
பாதயாத்திரையாக சென்று கட்சி நிர்வாகிகளையும், பொது மக்களையும் சந்தித்து பேசுவதற்கான செயல் திட்டங்களையும், நிகழ்ச்சி நிரல்களையும், காங்கிரஸ் மேலிடம் தயாரித்து உள்ளது.
வரும் அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, கன்னியாகுமரியில் பாதயாத்திரையை ராகுல் துவக்குகிறார். ஒவ்வொரு மாநிலத்தின் எல்லையிலும், பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பாதயாத்திரையின் போது, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துக்களையும், குறைகளையும் ராகுல் கேட்டறிய உள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், ஆட்சி சாதனைகளை விளக்கியும், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டியும், கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசை விமர்சித்தும் பிரசாரம் செய்ய, ராகுல் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
'அக்னிபத்' திட்டத்திற்கு வட மாநிலங்களில் எழுந்துள்ள எதிர்ப்பும், ராகுலின் சுற்றுப்பயணத்தில் உருவாகும் எழுச்சியும், லோக்சபா தேர்தலில், தங்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில், பா.ஜ., கவனமாக உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், ராகுல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டால், ஜாமின், விடுதலை என, வழக்கு விசாரணையை மேற்கொள்வதில் தான் அவர் கவனம் செலுத்த முடியும்.
பாதயாத்திரையில் கவனம் செலுத்த முடியாது என்பதால், ராகுலுக்கு அமலாக்கத் துறை தரப்பில் நெருக்கடிகள் தரப்படலாம் என, காங்கிரஸ் வட்டாரம் எதிர்பார்க்கிறது. - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE