மதுரை தேனியை சேர்ந்த 18 வயது மாணவர் சக்திகுமார் விபத்தில் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடலுறுப்புகள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மூலம் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.
தேனி உத்தமபாளையத்தில் ரோட்டோர ஓட்டல் நடத்தும் அழகுசுந்தரி, முத்தரசு தம்பதியின் ஒரே மகன் சக்திகுமார். தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு முடித்த இவர், 2ம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக டூவீலரில் கல்லுாரி சென்ற போது கார் மோதி படுகாயமடைந்தார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் நன்றாக இயங்கி கொண்டிருந்ததால் சக்திகுமாரின் நிலை குறித்தும் உடலுறுப்பு தானம் குறித்தும் பெற்றோரிடம் டாக்டர்கள் விளக்கினர்.
மாணவரின் பெற்றோர் சம்மதத்துடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளிகளுக்கு ஒரு சிறுநீரகம், கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும் இருதயம், நுரையீரல்கள் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டன.
மருத்துவமனையிலிருந்து மதியம் 12:30 மணிக்கு இருதயம் மற்றும் நுரையீரல்களை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் 20 கி.மீ., துாரத்தை 13 நிமிடங்களில் கடந்து மதுரை விமான நிலையத்தை அடைந்தது. இதற்காக உத்தங்குடியிலிருந்து விமான நிலையம் வரை மதுரை போக்குவரத்து துணைகமிஷனர்(பொறுப்பு) வனிதா தலைமையில் உதவி கமிஷனர்கள் திருமலைக்குமார், மாரியப்பன் மற்றும் போலீசார் தடையில்லா பாதை' அமைத்து ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல ஏற்பாடு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE