வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
கு.அருணாச்சலமூர்த்தி, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முப்படைகளில், நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் மத்திய அரசின், 'அக்னிபத்' திட்டம், நிச்சயம் நல்ல ராணுவ வீரர்களை உருவாக்கக் கூடிய திட்டம் தான். இந்தத் திட்டத்திற்கு, பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தான், அதிகளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்று சொன்னால், அது மிகையாகாது.
தமிழகத்தை ஆளுகின்ற கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் தற்போது இத்திட்டத்தை எதிர்க்கத் துவங்கி உள்ளன. அதைக் கண்டு பொதுமக்களும், இளைஞர்களும் ஏமாந்து விடக்கூடாது. கடந்த, 1960ம் ஆண்டுகளில், தி.மு.க., ஆட்சியை பிடிக்க, ஹிந்தி மொழிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தியது. அதன் எதிர்வினையை இன்று வரை நாம் அனுபவித்து வருகிறோம். எனவே, அக்னிபத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும், 25 சதவீதம் பேருக்கு மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இது தவிர, துணை ராணுவப் படையிலும் சேர, குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு தரப்பட உள்ளது. அத்துடன், பல முன்னணி தனியார் நிறுவனங்கள், இந்த அக்னி வீரர்களை அவர்களின் தகுதிக்கு ஏற்ப, வேலையில் சேர்த்துக் கொள்ளவும் முன்வந்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில், நம் நாட்டு ராணுவத்தின் வலிமையை உயர்த்த, அக்னிபத் திட்டம் மிகவும் அவசியமானது. மேலும், நான்காண்டு ராணுவப் பணியில் இருக்கும் போது, இந்த அக்னி வீரர்கள் ஒழுக்கமான குடிமகன்களாகவும், தேசப்பற்று மிக்கவர்களாகவும் உருவாவது நிச்சயம். அவர்கள் நான்காண்டு பணிக்காலத்தை முடித்ததும், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப, மத்திய - மாநில அரசுகள் அவர்களுக்கு பணி வழங்க முன்வர வேண்டும்.
அப்படி செய்யும் பட்சத்தில், அதிகளவில் ஈடுபாட்டுடன் இளைஞர்கள், இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர முன்வருவர். மேலும், ராணுவத்தில் அளிக்கப்படும் பயிற்சி வாயிலாக, ஒழுக்கநெறி மிக்கவர்களாக இளைஞர்கள் உருவாகலாம் என்பதால், அவர்கள் அரசு அலுவலகங்களில் பணியில் சேரும் போது, ஊழல், முறைகேடு குறையும். இன்று தமிழகத்தில், பள்ளி மாணவர்களே பொது இடங்களில் குடித்து, கும்மாளம் போடும் ஒழுக்கம் இல்லாத சூழ்நிலை உள்ளது. அத்துடன், சீர்கெட்ட அரசியல் கட்சி தலைவர்களின் அடிவருடியாக பல வாலிபர்கள் மாறுவதும், ஜாதி, மத அரசியல் தலை துாக்குவதும் அதிகரித்து வருகிறது. இதில் மாற்றம் வர வேண்டும் எனில், அக்னிபத் திட்டத்தை நாம் ஆதரித்தே ஆக வேண்டும்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தால், தமிழக மாணவர்களும், இளைஞர்களும் இழந்துள்ளது ஏராளம். அது போன்ற நிலைமை இனியும் உருவாகக் கூடாது. தேசப்பற்றுடன் கூடிய, ஒழுக்கமான இளைய சமுதாயம், எதிர்கால தலைமுறை உருவாக, மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை வரவேற்போம்.