சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு நடத்த அனுமதி தரக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் அளித்த மனுவை ஆவடி போலீசார் நிராகரித்துவிட்டனர்.
ஆவடி போலீஸ் கமிஷனரிடம், பன்னீர்செல்வம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், 'தற்போது நிலவுகிற அசாதாரண சூழ்நிலையில், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை, காவல் துறைக்கு உள்ளது. பெஞ்சமின் பாதுகாப்பு கோரி இருப்பது, தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த மனுவை ஆவடி போலீசார் நிராகரித்துவிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு கூட்டத்திற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். தனி நபர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால், இதில் தலையிட முடியாது. பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என ஆவடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுக்குழு நடக்கும், மண்டப பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒப்படைப்பு

இதனிடையே, கட்சியின் வரவு செலவு அறிக்கையை கட்சியின் பொருளாளரான பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் தான் விவரத்தை வாசித்து காட்ட வேண்டும் என்பதால் கணக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மறுப்பு

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறுகையில், தேர்தல் ஆணையத்திடம் செல்ல உள்ளதாக பரவிய தகவல் தவறானது. அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தற்போது செல்ல மாட்டோம். பொதுக்குழு கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை பொறுத்தே தேர்தல் ஆணையத்திற்கு செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.