வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அக்னிபத் திட்டத்தை பிரதமர் வாபஸ் பெறுவார் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பு உரவாகி உள்ளது. ஆனால், சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தி நாட்டின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்துள்ளது. சில தொழிலதிபர்களிடம் நாட்டை பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டார். தற்போது, ராணுவத்தில் உள்ள வேலைவாய்ப்பையும் மூடிவிட்டார். முதலில் ஒரே பதவி மற்றும் ஒரே ஓய்வூதியம் குறித்து பேசினர். தற்போது பதவியும் இல்லை. பென்சனும் இல்லை என்கின்றனர்.

சீன ராணுவம் நமது மண்ணில் அமர்ந்துள்ளது. ஆனால், நமது ராணுவத்தை பலப்படுத்துவதை விட்டுவிட்டு அரசு பலவீனப்படுத்தி வருகிறது. போர் நடந்தால், அதன் முடிவில் இது தெரியவரும். மத்திய அரசு ராணுவத்தை பலவீனப்படுத்தி நாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் தங்களை தேசபக்தர்கள் கூறி வருகின்றனர்.
விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்று கொள்ளும் என நான் கூறினேன். அதனை அரசு செய்தது. தற்போது, அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறும் என காங்கிரஸ் கூறுகிறது. இளைஞர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தருகின்றனர். தேசத்தை வலுப்படுத்த உண்மையான தேசபக்தி தேவை என்பதை இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்வோம்.
அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் என்னை பாதிக்காது. காங்கிரஸ் கட்சி தொண்டரை பயமுறுத்த முடியாது. அச்சுறுத்த முடியாது என்பதை என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய போது எனக்கு ஆதரவு அளித்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு ராகுல் கூறினார்.
இந்த நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம் இந்திய மண்ணில் சீன ராணுவம் அமர்ந்திருக்கிறது. பிரதமரே, உண்மையான தேசபக்தி என்பது ராணுவத்தை பலப்படுத்துவதில்தான் உள்ளது. ஆனால் நீங்கள் ஒரு 'புதிய ஏமாற்று' திட்டத்தின் மூலம் ராணுவத்தை பலவீனப்படுத்துகிறீர்கள். நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் இந்த இயக்கத்தில், நாங்கள் இளைஞர்களுடன் இருக்கிறோம். நான் மீண்டும் சொல்கிறேன், 'அக்னிபத்' திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE