ஊத்துக்கோட்டை:நீர்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் மீறி, ஊத்துக்கோட்டை கிருஷ்ணா கால்வாயில் வாலிபர்கள் அபாயகரமான முறையில் குளிக்கின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, 1983ல், தமிழக- - ஆந்திர அரசுகள் இடையே, கிருஷ்ணா நதிநீர் திட்டம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 'ஜீரோ பாயின்ட்' வரை, 152 கி.மீட்டர் துாரத்திற்கும், அங்கிருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வரை, 25 கி.மீட்டர் துாரம் என மொத்தம், 177 கி.மீட்டர் துாரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது.
ஒப்பந்தப்படி தற்போது கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. கால்வாயில் மூழ்கி இருவர் அண்மையில் இறந்தனர்.இதைத் தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர். ஆனாலும், கால்வாய் செல்லும் கிராமங்களில் உள்ள வாலிபர்கள் கால்வாயில் குளித்து வருகின்றனர்.ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கால்வாயில் அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் குளித்து வருகின்றனர்.