வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செஞ்சி, : செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் இந்த ஆண்டு குறித்த நேரத்தில் பருவ மழை பெய்ததால் விவசாய நிலங்களில் மானாவாரி மணிலா விதைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் உள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி மணிலா விதைப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாக செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்கள் உள்ளன.
இதில் நெல், கரும்பு, மணிலா பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். தென்மேற்கு பருவமழையை நம்பி ஆண்டு தோறும் ஜூன் மாதம் மத்தியில் துவங்கி ஜூலை மாதம் முதல் இரண்டு வாரங்கள் வரை புஞ்சை நிலங்களில் மானாவாரி மணிலா விதைப்பது வழக்கம்.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே மழையை எதிர் பார்த்து ஏராளமான விவசாயிகள் புஞ்சை நிலங்களில் புழுதி ஓட்டி தயார் நிலையில் வைத்திருந்தனர். பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பொழிந்து வருகிறது. இதுவரை மிதமாக பொழிந்துள்ள மழையினால் புழுதி ஓட்டி வைத்திருந்த நிலங்களில் மணிலா விதைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் காணப்படுகிறது.எனவே கடந்த சில நாட்களாக விவசாயிகள் மானாவாரி மணிலா விதைப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு மானாவாரி மணிலா விதைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை செம்டம்பர் மாத இறுதியில் துவங்கி அக்டோபர் மாதம் இறுதிவரை அறுவடை நடக்கும்.கடந்த சில ஆண்டுகளாக மானாவாரி மணிலா விதைப்பின் போது மழை கூடுதலாக பொழிந்ததும், காய் பிடிக்கும் பருவத்தில் மழையில்லாமல் செடிகள் காய்ந்து போனதாலும் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வில்லை.இந்த ஆண்டு குறித்த நேரத்தில் விதைப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பது செஞ்சி, மேல்மலையனுார் பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சொர்ணவாரிக்கும் தயார்
புஞ்சை நிலங்களில் மணிலா விதைப்பு தீவிரமாக நடக்கும் அதே வேலையில் நஞ்சை நிலங்களில் சொர்ணவாரி பருவத்தில் நெல் நடவு செய்தவற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கூடுதல் மழை பொழிந்ததால் ஏரி, குளங்களில் தற்போதுவரை தண்ணீர் உள்ளது.விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் குறையாமல் இருப்பதால் சொர்ணவாரி பருவத்தில் நெல் நடவு செய்ய போதிய தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் பருவமழையும் ஏமாற்றம் அளிக்காமல் பெய்து வருவதால் புஞ்சை நிலங்களில் ஏர் ஓட்டி குறுகிய கால பயிர்களுக்கான நெல் நாற்று விடும் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.இதனால் இந்த ஆண்டு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி முழு வீச்சில் நடக்கும் நிலை இப்பகுதியில் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE