சென்னை : 'அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் அனைத்து தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்ட துவங்கினர். மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலர்களில், 69 பேர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என, அனைவரும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைக் கண்ட பன்னீர்செல்வம், இன்று நடக்கவிருந்த பொதுக்குழுவை ஒத்தி வைக்கும்படி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்காத பழனிசாமி, 'திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்' என பதில் அனுப்பினார்.அதைத் தொடர்ந்து, 'பொதுக்குழு நடந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, பொதுக்குழு நடத்த அனுமதிக்க வேண்டாம்' என, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், போலீசில் மனு கொடுத்தனர். அந்த மனுவை நிராகரித்த போலீசார், 'பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்' என அறிவித்தனர்.
நீதிமன்றம் அனுமதி
இதையடுத்து, பன்னீர் செல்வம் தரப்பினர் நீதிமன்றம் சென்றனர்; பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரினர். இதனால் பொதுக்குழு நடக்குமா, நடக்காதா என்ற நிலை ஏற்பட்டது. நேற்று மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது. முடிவில், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து,நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். முன்னதாக, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள, 23 வரைவு தீர்மானங்களை, பழனிசாமி தரப்பினர் பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதற்கு பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்கினார். அதேபோல, கட்சியின் வரவு செலவு கணக்கும், அவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
தீர்மானக் குழு வடிவமைத்து கொடுத்த, 23 தீர்மானங்கள் தவிர, வேறு தீர்மானங்களை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என, நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பில் கோரப்பட்டது. 'பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படலாம். பொதுக்குழுவுக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது' என, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்கவில்லை. இது பழனிசாமி தரப்பினரிடம் மகிழ்ச்சியையும், பன்னீர்செல்வம் தரப்பினரிடம் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டபடி பொதுக்குழுவை இன்று நடத்த, அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
இன்று பொதுக்குழு
சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று காலை 10:00 மணிக்கு அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்தது.
பன்னீர்செல்வம் வெளியேறினார்
செயற்குழு துவங்கியதும் கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில்; ஏற்கனவே உருவாக்கப்பட்ட 23 அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என்றார். மேலும் தொண்டர்கள் அனைவரும் ஒற்றைத்தலைமையை விரும்புவதால் இதனையே வரும் பொதுக்குழுவில் ஒரு தீர்மானமாக கொண்டு வருவோம் என்றார் இணை ஒருங்கிணப்பாளர் கே.பி.முனுசாமி. அனைவரும் ஒற்றை தலைமையை வலியுறுத்தி பேசியதால் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து புறக்கணித்து வெளியேறினார். அவருடன் வெளியே சென்ற வைத்தியலிங்கம் , இந்த பொதுக்குழு செல்லாது என்று மைக்கில் பேசி விட்டு கிளம்பினார். இதனையடுத்து வெளியே வந்த பன்னீர்செல்வம் மீது சிலர் தண்ணீர் பாட்டல்களை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வரும் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பழனிசாமி தன் எண்ணப்படி வெற்றி பெற்று, அ.தி.மு.க.,வை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவார் என்பது உறுதியாகி விட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE