புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., வேட்பாளராக அறிவித்துள்ள திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ததற்காக, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளும் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடக்க உள்ளது. இதில், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் காலையில் அறிவிக்கப்பட்டார்.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளராக, முன்னாள் ஜார்க்கண்ட் கவர்னர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டார்.பா.ஜ., வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்றாலும், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பிராந்திய கட்சிகள், எந்தத் தரப்புக்கு ஆதரவு அளிக்கும் என்பதே, இந்தத் தேர்தலின் வெற்றியை முடிவு செய்யும்.
இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.மொத்த ஓட்டுகளில், பிஜு ஜனதா தளத்தின் பங்கு 2.8 சதவீதமாக உள்ளது. இந்த ஓட்டுகள், ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமாரும், திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்று உள்ளார்.இவர் கடந்த முறை தே.ஜ., கூட்டணியில் இல்லாதிருந்த போதும், ஜனாதிபதி பதவியில் இருந்து செல்லும் ராம்நாத் கோவிந்தை ஆதரித்தார்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் முதல்வராக உள்ள பிரேம் சிங் தமாங்கும் தன் ஆதரவை தெரிவித்துள்ளார். இவருடைய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தன் கிராமத்தில் திரவுபதி முர்மு கூறியதாவது:தே.ஜ., கூட்டணி சார்பாக என்னை வேட்பாளராக அறிவித்துள்ளதை, 'டிவி'யில் பார்த்து ஆச்சரியமடைந்தேன்; மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் மிக உயரிய பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவேன் என கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த என்னை வேட்பாளராக நிறுத்திஉள்ளது, 'அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக' என்ற பா.ஜ.,வின் கொள்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. நான் ஒடிசாவின் மகள்; அதனால் எனக்கு ஆதரவாக ஓட்டளியுங்கள் என்று, மாநிலத்தை ஆளும் பிஜு ஜனதா தளத்தின் அனைத்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்க எனக்கு உரிமை உள்ளது. அவர்களுடைய ஓட்டு எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திரவுபதி முர்மு தன் சொந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று, தரையை பெருக்கி சுத்தப்படுத்தி வழிபட்டார். இவர், வரும் 24ம் தேதி தன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட ஆதரவு கட்சித் தலைவர்கள் முன்னிலையில், அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக பா.ஜ., தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்கள் யஷ்வந்த் சின்ஹா, திரவுபதி முர்முவுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய கவுரவம்!
திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் பேசினார். அவர் இந்த மாநிலத்தின் மகள். இது ஒடிசாவுக்கு கிடைத்துள்ள கவுரவம். நாட்டில் பெண்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக இதை நான் பார்க்கிறேன். கட்சி வேறுபாடு இல்லாமல், ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும் அவருக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும்.
நவீன் பட்நாயக்,
ஒடிசா முதல்வர்,
பிஜு ஜனதா தளம்
எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தன் பிரசார யுக்திக்கான முதல் கூட்டத்தை நேற்று நடத்தினார். இதில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதன் பின், அவர் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலில் என்னை பொது வேட்பாளராக அறிவித்துள்ள கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது, இரண்டு நபர்களுக்கு இடையேயான போட்டி அல்ல; நாடு சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைக்கு எதிரான போட்டியாகும்.ஜனாதிபதி பதவி என்பது மிகவும் முக்கியமானதாகும். அரசின் எந்த நிர்ப்பந்தத்துக்கும் நான் அடிபணிய மாட்டேன்.நம் நாட்டுக்கு, 'ரப்பர் ஸ்டாம்ப்' ஜனாதிபதி தேவையில்லை. இதை, தேர்தலில் ஓட்டு போட உள்ள அனைத்து கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வரும் 27ல் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள யஷ்வந்த் சின்ஹா, ஜார்க்கண்ட் மற்றும் பீஹாரில் இருந்து தன் பிரசாரத்தை துவக்க உள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து, எம்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது:ஜனாதிபதி தேர்தலில், பார்லிமென்டில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில், எம்.பி.,க்கள் தங்களுடைய ஓட்டை பதிவு செய்யலாம். தேர்தல் நாளன்று புதுடில்லிக்கு வர முடியாதவர்கள், தங்கள் மாநில சட்டசபையில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில் ஓட்டளிக்கலாம்.இதற்காக முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் நாளுக்கு, 10 நாட்களுக்கு முன் வரை இந்த விண்ணப்பத்தை அளிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்து அதற்கு அனுமதி அளித்த பின், ஓட்டளிக்கும் இடத்தை மாற்ற முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கமாக எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்திலும், எம்.எல்.ஏ.,க்கள் மாநில சட்டசபையிலும் ஓட்டளிக்க வேண்டும். ஆனால், தற்போது சட்டசபையிலும் ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.அதேபோல் எம்.எல்.ஏ.,க்களும், பார்லிமென்ட் வளாகத்தில் ஓட்டளிக்கலாம். சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஒரு மாநில எம்.எல்.ஏ., மற்றொரு மாநில சட்டசபையில் ஓட்டளிக்கவும் வாய்ப்பு தரப்படும். ஆனால், இதற்காக முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE