வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
பா.மீனா குமாரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் பிரதமர்கள் நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராவின் பேரன், ராஜிவின் மகன் என்றாகி விட்டால் போதுமா? 'தலைவர்' என தன்னைத் தானே கருதிக் கொள்வதா? இப்படி தான் கோபம் எழுகிறது, காங்., ராகுலைப் பார்த்தால்! சிறு வயதில் பால் முகம் மாறாத பாலகனாய் வலம் வந்தபோது, 'தந்தையின் மரணத்தைத் தாங்க முடியாமல் குழந்தை பரிதவிக்குமே...' என்ற பச்சாதாபம் ஏற்பட்டது உண்மை தான்.
அதன் பின், வெளிநாட்டு படிப்பு. கன்னத்தில் குழி விழுந்தபடி, வெள்ளந்தியாய் சிரிப்பு... இப்படி தான் வளர்ந்தது அந்தக் குழந்தை. இதன்பின்... கட்சிக்குள் 'என்ட்ரி!' முதலில் அனைவரும் பரவசமாய் தான் வரவேற்றோம்; மறுக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல, தேர்தலுக்குத் தேர்தல் திருமகன் வாய் திறக்கத் திறக்க, அச்சச்சோ... அரைவேக்காட்டுத்தனம்!
கேம்ப்ரிட்ஜ் படிப்பெல்லாம், கம்யூனிசம் தான் கற்றுக் கொடுத்ததோ என்ற சந்தேகம் எழும் வகையில், நம் ஜனநாயகத்திற்கு ஒவ்வாத, 'நெகட்டிவ்' பேச்சு தான் அனைத்தும். கட்சியினரை, எதிர்மறையாகச் சிந்திக்க வைத்து, செயல்பட வைத்து, பெரியவர்களை அலட்சியப்படுத்தி, கட்சியை விட்டு வெளியேற்றி, பா.ஜ.,வைப் பரம எதிரியாய், காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தும் பாணியில் மிகச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார் ராகுல்.

காங்., கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் நட்வர் சிங் எழுதிய சுய சரிதமான, 'ஒன் லைப் இஸ் நாட் எனப்' என்ற புத்தகத்தில், சோனியாவின் செயல்பாடுகள் பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார். அதில், இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு யார் காரணம் என்று கூறி இருக்கிறார். 'லிங்க்' புரிந்ததா? அம்மா சோனியா, பல கதைகளை மகனுக்கு, 'சொல்லிச் சொல்லி' ஊட்டி வளர்த்திருப்பதால், அதே 'நெகட்டிவிசம்' வந்து விட்டது ராகுலுக்கு!
அவர் வளர வளர, நாடு தீ பற்றி எரிகிறது. விவசாயிகள் பிரச்னை, வெட்டுக்கிளிகள் பிரச்னை, காஷ்மீர் பிரச்னை, டில்லி பல்கலை பிரச்னை, பார்லி.,யில் ரகளை, பஞ்சாப் பிரச்னை என அடுக்கடுக்காய் நாடு கைகொள்ளும் எதிர்வினைகள் அனைத்தும், ராகுலின் கைங்கர்யமே! இதெல்லாம், 'வீர' விளையாட்டாம் அவருக்கு!
'நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் சந்தி சிரிக்கப் போகிறோமே...' என்ற கவலையில், நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடிய, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப் போகும், 'அக்னிபத்' விவகாரத்தை, 'நெகட்டிவ்' ஆக திரித்துப் போட்டு, நாட்டை பற்றி எரிய விட்டிருக்கிறார். இவரையா மாபெரும் கட்சியின் தலைவர் என்று ஏற்றுக் கொள்வது? கட்சியை அழிக்கும் தலைவர் என்ற பட்டம் தவிர, வேறு எந்த பெருமையையும் பெற்று விடப் போவதில்லை, இவர்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE