இந்திய நிகழ்வுகள்
3 சிறார்கள் குளத்தில் விழுந்து பலி
பாலாகாட்-மத்திய பிரதேசத்தில், பள்ளி முடிந்து காணாமல் போன மூன்று சிறார்களின் உடல்கள் அருகில் உள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்டன.ம.பி.,யின், பாலாகாட் மாவட்டத்தின் சீதாபூர் கிராமத்தை சேர்ந்த, 5 - 9 வயது வரையிலான இரண்டு சிறுமி மற்றும் ஒரு சிறுவன், நேற்று முன் தினம் அங்கன்வாடி பள்ளிக்கு சென்றனர்.
![]()
|
பள்ளி முடிந்து மதியம் வீடு திரும்பியவர்களை காணவில்லை. பெற்றோர் கிராமம் முழுதும் தேடினர். நேற்று முன் தினம் இரவு, விவசாய நிலத்தின் அருகே உள்ள குளத்தில் மூன்று சிறார்களின் உடல்கள் மிதந்தன.'பள்ளி முடிந்து வரும் வழியில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் குளத்தில் தவறி விழுந்திருக்க கூடும்' என, சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரூ 34000 கோடி மோசடி
புதுடில்லி-'தீவான் ஹவுசிங் பைனான்ஸ்' அதிபர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் சகோதரர்கள் மீது வங்கிகளில் இருந்து 34 ஆயிரத்து 615 கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாத புதிய வழக்கை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது.
தீவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கபில் வாத்வான் மற்றும் இயக்குனர் தீரஜ் வாத்வான் ஆகியோர், முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள இவர்களது சொத்துக்களை அமலாக்கத் துறைமுடக்கியுள்ளது.இந்நிலையில், கபில் மற்றும் தீரஜ் வாத்வான் மீது புதிய முறைகேடு வழக்கை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது.
இவர்கள் பல்வேறு வங்கிகளில் 34 ஆயிரத்து 615 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களை தவிர, 'அமரிலிஸ் ரியல்ட்டர்ஸ்' நிறுவனத்தின் சுதாகர் ஷெட்டி உட்பட எட்டு கட்டுமான நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான 12 இடங்களில் 50க்கும் மேற்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக நிகழ்வுகள்
தாய்மாமனை கொலை செய்த மருமகன் கைது
உத்தமபாளையம்,-உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டியை சேர்ந்த மரியதாஸ் 62, கல்லால் அடித்து கொலை செய்த மருமகன் ஜெயக்குமார் 24,யை போலீசார் கைது செய்தனர். கொலையான மரியதாஸ் கட்டட தொழிலாளியாக இருந்தார். இவரது தங்கை மகன் ஜெயகுமார் 24 உடன் வசித்தார். ஜூன் 12 ம் தேதி இரவு மரியதாசிடம் ரூ.200 கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கல்லால் அடித்து மரியதாசை கொலை செய்து போலீசிற்கு பயந்து தப்பியோடினார். உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் திருப்பூரில் ஒரு வாரம் முகாமிட்டு, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், ஜெயக்குமாரின் நண்பரின் அலைபேசி சிக்னல்களை வைத்து, ஜெயக்குமாரை கைது செய்தனர்.கொலை நடந்த 10 நாட்களில் கொலையாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.
ஆட்டிறைச்சியால் சுகாதார கேடு
தேனி, -ஆட்டிறைச்சிக் கழிவுகளை சாக்கடையில் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக்கேடு நிலவுகிறது. அள்ளப்படாத குப்பையால் துர்நாற்றம், போக்குவரத்து நெருக்கடி, அடிக்கடி மின்தடையால் அவதி, எரியாத ஹமாஸ் விளக்குகளால் இருளில் மூழ்கும் தெருக்கள் என்பன உட்பட பல்வேறு வசதி குறைபாடுகளால் தேனி அல்லிநகரம் நகராட்சி 22வது வார்டு பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.இவ்வார்டில் பாரஸ்ட் ரோடு 1, 2, 3 தெருக்கள், ஜவஹர் மெயின்ரோடு, என்.ஆர்.டி., குறுக்குத் தெரு, என்.ஆர்.டி., மெயின்ரோடு, காமராஜர் ரோடு, பாரதியார் மெயின் தெரு, காந்திஜி மெயின் ரோடு என 9 தெருக்கள் உள்ளன. என்.ஆர்.டி., நகர் பாரதியார் மெயின் ரோடு சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. அதன் அருகில் ரோட்டில் இருபுறமும் கழிவு நீர் செல்ல சாக்கடை உள்ளன. இதில் மேற்குப்புற வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, மழை நேரங்களில் மேடான வடக்கு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் ரோட்டில் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.இதனால் மழை நேரங்களில் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர்.
பழநியில் பா.ஜ.,வினர் கைது
தொப்பம்பட்டி,- -பழநி தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். அப்போது ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இதன்படி, முன்னாள் மாவட்ட பார்வையாளர் பழனிச்சாமி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம், ஒன்றிய துணைத் தலைவர் செல்லத்துரை, மேற்கு ஒன்றிய தலைவர் சதீஷ்குமார், தொப்பம்பட்டி ஒன்றிய பொதுச் செயலாளர் மணிவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
![]()
|
மானபங்கம் மிரட்டல் பெண் தற்கொலை; இருவர் சரண்
ஆத்துார்,--நாயக்கனுாரில் பெண்ணுக்கு மானபங்க மிரட்டல் விடுத்து தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட இருவர் ஆத்துார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.எரியோடு அருகே நாயக்கன் ஊரைச் சேர்ந்தவர் கார்த்திக் 36. இரு நாட்களுக்கு முன்பு இதே ஊரை சேர்ந்த குணசேகரன் 40, அவரது நண்பர் பிரபாகரன் 21, கார்த்திக்கிடம் மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர். அவர் தரமறுத்ததால் கார்த்திக் வீட்டிற்கு இருவரும் சென்றனர். அங்கு கார்த்திக் மனைவி சித்ராவை 27, மானபங்கம் செய்து விடுவதாக மிரட்டி தாக்கினர். இதையடுத்து சித்ரா தற்கொலை செய்தார். எரியோடு போலீசார் குணசேகரன், பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். நேற்று இருவரும் ஆத்துார் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிபதி ஜெய்சங்கர் இருவரையும் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.
![]()
|
கஞ்சா பதுக்கிய நால்வர் கைது
நிலக்கோட்டை,-நிலக்கோட்டையில் 8.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.குண்டலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்தி 34. இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக மதுரை மண்டல டி.ஐ.ஜி., பொன்னிக்கு தகவல் கிடைத்தது. அவரது தனிப்படையினர், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், எஸ்.ஐ., தயாநிதி தலைமையில் குண்டலப்பட்டியில் கண்காணித்தனர். அதே ஊரைச் சேர்ந்த செண்பகராஜூக்கு விற்பனை செய்ய கார்த்தி தனது மனைவி பாண்டி மீனாவுடன் 32 வந்தபோது போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வீட்டிலும் சோதனையிட்டனர்.அப்போது 6.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கார்த்திக், அவரது தங்கை சித்ராதேவி, மனைவி பாண்டி மீனா, கஞ்சா வாங்க வந்த செண்பகராஜை கைது செய்தனர். மேலும் ரூ.6,240, டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
ஆபத்தில் பள்ளி கட்டடம்; அச்சத்தில் மாணவர்கள்
நத்தம்,-நத்தம் ஊராளிபட்டி அரசு தொடக்கபள்ளியில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டடம் கூரை சேதமடைந்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். ஊராளிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. அதில் ஒன்று 1979ல், மற்றொன்று 2006ல் கட்டப்பட்டது. தற்போது இவ்விரண்டு வகுப்பறை கட்டடத்தின் கூரை சிமென்ட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தரும்படி சேதமடைந்து எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தான் ஊராட்சி சார்பில் இடிந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்துள்ளனர். இருந்தும் கட்டடத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்து ஆபாய நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சத்துடனேயே வகுப்பறைக்குள் அமர்ந்து படித்து வருகின்றனர். பெற்றோர்களும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். புதிய சமையல் கூடம் கட்டப்பட்டதால் பராமரிப்பின்றி உள்ள பழைய சமையல் கூடத்தை அப்படியே விட்டுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும். பழைய சமையல் கூடத்தை இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பெற்றோர் தயக்கம்
மாணிக்கம், விவசாயி, ஊராளிபட்டி: அரசு தொடக்கப்பள்ளியின் இரண்டு வகுப்பறை கட்டடங்களுமே ஆபத்தான நிலையில் உள்ளது. அதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். கூரை எப்போது பெயர்ந்து விழுமோ என்ற அச்சத்துடன் தினமும் ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டியுள்ளது. அதே பயத்துடன் மாணவர்கள் பாடம் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஏழை மாணவர்கள்
ந.முருகன், மெக்கானிக், ஊராளிபட்டி: எங்கள் பகுதியில் விவசாயத்தை நம்பியுள்ள கூலித்தொழிலாளர்களே அதிகம். குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு வசதி இல்லை. அதனால் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளியை தான் நம்பியுள்ளனர். ஆனால் பள்ளி கட்டடம் சேதமடைந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
கட்டடத்தை அகற்றுங்க
ப.முத்துப்பாண்டி, தொழிலாளி, ஊராளிபட்டி: அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டடம் போல் பயன்பாடின்றி உள்ள சமையல் கூடத்தால் மாணவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. சிதிலமடைந்த சமையல் கூட கட்டடத்திற்கு அருகே மாணவர்கள் விளையாடுவதால் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. விபரீதம் ஏற்படும் முன் பயன்பாடில்லாத கட்டடத்தை அகற்ற வேண்டும்.
அதிகாரிகள் சொல்வதென்ன
முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறுகையில்,''சம்பந்தப்பட்ட நத்தம் பி.டி.ஓ., தான் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'',என்றார். நத்தம் பி.டி.ஓ., கிருஷ்ணன்(பொ) கூறுகையில்,''பள்ளி வகுப்பறை கட்டடத்தை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'', என்றார்.
போதையில் தீக்குளித்தவர் பலி
விருதுநகர்,--விருதுநகர் இந்திராநகரில் வசிப்பவர் முத்துக்குமார் 35, கிரில் ஒர்க்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி 29, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.முத்துக்குமாருக்கு 8 ஆண்டாக மது குடிக்கும் பழக்கம் உள்ளது. ஜூன் 17ல் அதிகாலையில் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்தார். இதை விஜயலட்சுமி கண்டித்தார். பின்னர் காலை 8 :00மணிக்கு குளிக்க சென்றவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியார் நிறுவன குடோனுக்கு கொள்ளையர்கள் தீ வைப்பு; பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
கடலுார், : தனியார் நிறுவன தளவாட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த 'குடோனை' கொள்ளையர்கள் தீ வைத்து எரித்ததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.கடலுார் மாவட்டம், பெரியக்குப்பம் பகுதியில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் துவங்குவதற்கு, என்.ஓ.சி.எல்., நிறுவனத்தின், நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன், 20 ஆண்டுகளுக்கு முன், 2,000 ஏக்கர் இடத்தை கையகப்படுத்தி, கட்டுமான பணிகளை துவக்கியது.கடந்த 2011ல் வீசிய, 'தானே' புயல் காரணமாக கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. முன்னதாக எடுத்து வரப்பட்ட இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் 'காப்பர்' கம்பிகள் கம்பெனி வளாகத்தில் திறந்த வெளியில் கிடக்கின்றன.
இந்த இடத்தை சுற்றியுள்ள கிராமத்தினர் சிலர், நிறுவன வளாகத்திற்குள் புகுந்து, பொருட்களை திருடி வந்தனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் திருடிய இரும்பு பொருட்களை வாங்கிய பழைய இரும்பு கடைகளில், போலீசார் அதிரடி சோதனை செய்து, அவற்றை பறிமுதல் செய்து, கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.நேற்று அதிகாலை 3.00 மணிக்கு, கொள்ளையர்கள் திடீரென நிறுவன வளாகத்திற்குள் நுழைந்து தளவாட பொருட்கள் வைத்திருந்த, குடோனை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.காற்றின் வேகம் அதிகரித்ததால், தீ குடோன் முழுவதும் பரவி குடோனில் வைத்திருந்த, பலகோடி ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்த 'சிப்காட்' தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தனர்.தனியார் கம்பெனி தளவாட பொருட்கள் வைத்திருந்த குடோனை, கொள்ளையர்கள் கொளுத்திய சம்பவத்தால், இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE