வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்த அ.தி.மு.க., பொதுக்குழு முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால், நடத்தப்பட்ட மிகச்சிறந்த நாடகம் போல தெரிந்தது.
பொதுக்குழு துவங்கி, வைகை செல்வன் வரவேற்று பேசியதும் நடுவில் புகுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென மைக் முன்பு வந்து '23 தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது' , என்று சத்தமாக கூறிவிட்டு அமர்ந்தார். அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, ' என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே என்ற பாடலை குறிப்பிட்டு விட்டு தலைவன் ஒருவன் இருக்கிறான். அவன் வருவான், வருவான் என்று ஆணித்தரமாக கூறிவிட்டு அமர்ந்தார். அப்பொழுதே அந்த கூட்டம் எதை நோக்கி செல்கிறது, யாருக்கு மகுடம் சூடப்போகிறது என்பது நன்றாகவே புரிந்தது.

அதை நிரூபிப்பது போல், அடுத்த பேசிய கே.பி.முனுசாமி, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஒற்றை தலைமை தீர்மானத்தோடு தான் கூட்டப்படும் என்று பேசினார். உடனே அரங்கத்தில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், கைதட்டி ஆரவரித்தனர்.
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, ஒற்றை தலைமை நாயகன் எடப்பாடி பழனிசாமி என்று இபிஎஸ்., ஐ உயர்த்தி பிடித்தார். இதையெல்லாம் மேடையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ் சுவாரஸ்யம் இல்லாமல் கேட்டு கொண்டிருந்தார்.
திரும்பவும் பேசிய சி.வி.சண்முகம் ஒற்றை தலைமை தீர்மானத்தோடு அடுத்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கான தேதியை அவைத்தலைவர் இப்பொழுதே அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையில் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு உள்ளனர் என்று கூறிவிட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய காகித பைலை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் கொடுத்தார்.

இதற்காகவே காத்து கொண்டிருந்தது போல், தமிழ் மகன் உசேனும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி இதே மண்டபத்தில் நடக்கும் என்று உடனே பதிலளித்தார். ஒரு பொதுக்குழுவை புதிதாக கூட்டுவதற்கு முன்பு, எந்த தேதியில் கூட்ட வேண்டும் என்று, கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்காமல் தேதியை உடனே முடிவு செய்ய முடியுமா ஆனால், தமிழ் மகன் உசேன் உடனடியாக தேதியை அறிவித்தது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இது முன்கூட்டியே பேசி வைத்து அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஓ.பி.எஸ்.,ஐ ஓரங்கட்ட அனைத்து ஏற்பாடுகளும் முன்பே செய்யப்பட்டதும், மேடையில் பேசிய எல்லாருமே ஒரே மாதிரியாக பேசியதும், இ.பி.எஸ்., எந்தளவுக்கு திறமையாக காயை நகர்த்தி உள்ளார் என்பதை காட்டியது.
மொத்தத்தில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் திறமையாக கதை வசனம் எழுதப்பட்ட நாடகமாக அமைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE