தாம்பரம், :'சைபர் குற்றங்களை தவிர்க்க, கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்' என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்களை குறி வைத்து, அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டும் புதுவகையான சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன. இது பற்றி, சைபர் கிரைம் போலீசார், கடந்த சில நாட்களில், ஏராளமான வழக்குகளை பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அவசரத்திற்கு கடன் வாங்க, சில குறிப்பிட்ட கடன் பெறும் செயலிகளை, பதவிறக்கம் செய்யும் போது, தங்களின் தனிப்பட்ட விபரங்கள், சைபர் கிரைம் குற்றவாளிகளால் திருடப்படுகின்றன.கடன் கொடுத்த தொகையை திருப்பி செலுத்தக் கூறி நெருக்கடி கொடுப்பதுடன், வேறு ஆண் அல்லது பெண் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களோடு 'மார்பிங்' செய்து, கடன் பெற்றவர்களுக்கோ அல்லது அவர்களின் பெற்றோர், உறவினர், நண்பர்களின் மொபைல் போன் எண்களுக்கோ அனுப்பி வைத்து, அதிக பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே, கடன் பெறும் செயலிகளை, பதவிறக்கம் செய்யவோ அல்லதுபயன்படுத்தவோ வேண்டாம். அவ்வாறு ஏமாற்றப்பட்டாலோ, மிரட்டலுக்கு ஆளானாலோ, உடனடியாக காவல் நிலையத்திலோ, காவல் உதவி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.