கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலை அருகில், கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்ய, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி, ஐந்தாவது வார்டில் உள்ள மகாலட்சுமி நகர், பிரதான சாலையில் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி உள்ளது.இந்த சாலையில் கழிவு நீர் வடிகால்வாய் இருந்தும், சீராக செல்லாமல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ச.பிரபாவதி, 67, கூறியதாவது: மகாலட்சுமி நகர் பிரதான சாலை, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ளது. இந்த சாலையை ஒட்டி கழிவு நீர் கால்வாய் இருந்தும், சீராக செல்ல முறையான வழி இல்லாததால் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.அதில் கொசுக்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் அருகிலேயே தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. ஜி.எஸ்.டி., சாலையில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.கால்வாயை சுத்தம் செய்து, கழிவு நீர் சீராக செல்ல, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.