சென்னை:தமிழகத்தில், மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும், 27ம் தேதி வரை, மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று மேகமூட்டம் காணப்படும். சில நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மணலுார்பேட்டையில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
குமரி கடல், தெற்கு கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில், இன்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். அதேபோல், கர்நாடகா மற்றும் அதையொட்டிய அரபி கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.