சென்னை:தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கோரி, பா.ஜ., நிர்வாகிகள் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரை சந்தித்து பேசினர்.
தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் நேற்று மாலை, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.அஅதன்பின், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை, அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தனர்.
இருவர் உடனான சந்திப்பு, தலா 20 நிமிடங்கள் நடந்தது. அ.தி.மு.க.,வில் கடும் மோதல் நிலவும் நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக, பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு கேட்பதற்காக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்களை, பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்ததாக தகவல் வெளியானது.
இந்த சந்திப்பின்போது, பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையிலான மோதல் குறித்தும் பேசப் பட்டதாக கூறப்படுகிறது.ஏற்கனவே, அ.தி.மு.க., இரண்டு அணிகளாக செயல்பட்டபோது, மீண்டும் இணைவதற்கு, பா.ஜ., மேலிடம் உதவியது. அதேபோல், தற்போதும் பா.ஜ., தலையீடு துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பா.ஜ., நிர்வாகிகள் சந்திப்பு குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறிய தாவது: ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கோரி, பழனிசாமியை சந்தித்தனர்.மூத்த தலைவர்களை கலந்து பேசி, இணை ஒருங்கிணைப்பாளர் உரிய அறிவிப்பு வெளியிடுவார். எங்கள் கட்சி உள்விவகாரத்தில், பா.ஜ., தலையிடுவதில்லை; அதை நாங்கள் விரும்புவதில்லை. வரும் 11ம் தேதி பொதுக்குழு நடக்க உள்ளது. பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசியது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2017ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க., மூன்று அணிகளாக இருந்தது. அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணியில், 12 எம்.எல்.ஏ.,க்கள், 13 எம்.பி.,க்கள் இருந்தனர். தினகரன் அணியில், 32 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.பி., இருந்தனர். மற்ற எம்.எல்.ஏ.,க்கள், அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி பக்கம் இருந்தனர்.
அப்போது மூன்று அணியினரிடமும், பா.ஜ., தரப்பில் ஆதரவு கோரப்பட்டது. அவர்களும் பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு பின், அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.இம்முறையும் அ.தி.மு.க.,வினர் இரு அணிகளாக உள்ளனர். தமிழக பா.ஜ., நிர்வாகிகள் நேற்று, இரு தரப்பையும் சந்தித்து ஆதரவு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.