சென்னை, ''தமிழகத்தில், 24 மணி நேரத்தில் ஏற்படும் தொற்றில், 50 சதவீதம் சென்னையில் கண்டறியப்படுகிறது. இதனால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, அடையாறில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் கூறியதாவது:நாட்டில் எட்டு மாநிலங்களில் 24 மணி நேரத்தில், 1,000 முதல் 6,000 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில், 24 மணி நேரத்தில் ஏற்படும் தொற்றில், 50 சதவீதம் சென்னையில் கண்டறியப்படுகிறது. இதனால், பரிசோதனையை அதிகரித்துள்ளோம்.சென்னையில் தற்போது 2,225 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்; உயிர் பாதிப்பு ஏதும் இல்லை. இதில், 92 சதவீதம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். இவர்களை, 3,500 களப்பணியாளர்கள் கண்காணிக்கின்றனர். மருத்துவமனையில், 8 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முன்பு கல்வி நிறுவனங்களில் அதிக பாதிப்பு இருந்தது. தற்போது, அந்த நிலை இல்லை.பள்ளி குழந்தைகளுக்கு, சளி, காய்ச்சல் உள்ளிட்ட சிறிய அறிகுறி தெரிந்தால், உடனே அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். பெற்றோர், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.