மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி உடைகிறது: சிவசேனா அறிவிப்பால் கட்சிகள் அதிருப்தி| Dinamalar

மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி உடைகிறது: சிவசேனா அறிவிப்பால் கட்சிகள் அதிருப்தி

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (8) | |
மும்பை-அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் வகையில், ''மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகத் தயார்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று அறிவித்தார். இது, கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து அக்கட்சிகளும் ஆலோசித்து வருவதால்,

மும்பை-அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் வகையில், ''மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகத் தயார்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று அறிவித்தார். இது, கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.latest tamil newsகூட்டணியில் இருந்து விலகுவது குறித்து அக்கட்சிகளும் ஆலோசித்து வருவதால், முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆட்சி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக்கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தபோதும், முதல்வர் பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டதால், கூட்டணி முறிந்தது.

போர்க்கொடி

இதையடுத்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை உருவாக்கி, சிவசேனா ஆட்சி அமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் சிலர் திடீரென குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள 'ரிசார்ட்'டிற்கு சென்றனர். இவர்கள் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். ஷிண்டேவுக்கு ஆதரவாக, 37 சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஒன்பது சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள இவர்களை சமாதானப்படுத்த, சிவசேனா கடும் முயற்சியை எடுத்து வருகிறது.விலக மாட்டோம்

முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், அரசு இல்லத்தில் இருந்து தன் சொந்த வீட்டுக்கு அவர் குடி புகுந்தார்.கடந்த மூன்று நாட்களாக நிகழ்ந்து வரும் இந்த அரசியல் குழப்பங்களால், உத்தவ் தாக்கரே அரசு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று காலையில் கூறியதாவது:ஏக்னாத் ஷிண்டே தலைமையில் சென்றுள்ளோர், தாங்கள் உண்மையான சிவசேனா தொண்டர்கள் என்றும், கட்சியில் இருந்து விலக மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் ஹிந்துத்துவா பிரச்னையை எழுப்பியுள்ளனர்

நீங்கள் உண்மையான சிவசேனா தொண்டர்களாக இருந்தால், மஹாராஷ்டிரா விகாஸ் கூட்டணியில் இருந்து கட்சி விலக வேண்டும் என்று விரும்பினால், தைரியத்துடன் மும்பைக்கு வர வேண்டும்; முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் பேச வேண்டும். உங்களுக்கு, 24 மணி நேரம் அவகாசம் தரப்படுகிறது.உங்களுடைய கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம். அதை விடுத்து, சமூக வலைதளங்கள் வாயிலாக கருத்து தெரிவிக்க வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.சஞ்சய் ராவத்தின் இந்த கருத்து, கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கூட்டணியிலிருந்து சிவசேனா விலகுவதற்கு முன், தாங்கள் வெளியேறுவது குறித்து இந்தக் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால், மஹாராஷ்டிராவில் இக்கூட்டணி முறிந்து, உத்தவ் தாக்கரேயின் ஆட்சி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறுகையில், ''ஏக்னாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் முன் ஆஜராக வேண்டும். சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமா, இல்லையா என்பதை கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

எம்.எல்.ஏ.,க்கள் கடிதம்

கவுஹாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் கட்சியிலும், ஆட்சியிலும் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து, எங்களுடைய வலியுறுத்தலால், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கும் துரதிருஷ்டவசமான முடிவை ஏக்னாத் ஷிண்டே எடுக்க நேர்ந்தது.சொந்தக் கட்சியைச் சேர்ந்த முதல்வரை நாங்கள் சந்திக்க முடியவில்லை. அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள கட்சியினர் சாதாரணமாக சந்திக்க முடிந்தது. இந்த நேரத்தில் ஷிண்டே எங்களுடைய குறைகளை, பிரச்னைகளை காது கொடுத்து கேட்டார்; தீர்வு காண்பதற்கும் உதவினார். ராஜ்யசபா தேர்தலின்போது, ஒரு இடத்தை இழப்பதற்கு நாங்கள் காரணம் இல்லை. உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு உங்கள் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரே சென்றபோது, எங்களை ஏன் உடன் அழைத்து செல்லவில்லை? ஹிந்துத்துவா, ராமர் கோவில், அயோத்தி ஆகியவை நம்முடைய பிரச்னை இல்லையா?இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தப்பி வந்தவர் பேட்டி

குஜராத்தின் சூரத்துக்கு, அதிருப்தியாளர்களுடன் சென்ற சிவசேனா எம்.எல்.ஏ., கைலாஷ் படேல், அங்கிருந்து தப்பி மும்பை வந்துள்ளார். அவர் கூறியதாவது:எங்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். என்னைப் போலவே பலரும் திரும்பி வர தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் கட்டாயப்படுத்தி அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதற்காக திரும்பி வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.,க்களும் ஓட்டம்

அசாம் மாநிலம் கவுஹாத்தியில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன், சிவசேனாவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கட்சியை உடைப்பதற்கு தேவையான 37 எம்.எல்.ஏ.,க்களை விட அதிகமானோர் தன்னிடம் உள்ளதாக ஏக்னாத் ஷிண்டே கூறியுள்ளார். இந்நிலையில், 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, கவுஹாத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.மஹாராஷ்டிரா சட்டசபையில், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், 40க்கும் மேற்பட்டோர் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இக்கட்சிக்கு, லோக்சபாவில் 19 பேரும், ராஜ்யசபாவில் மூன்று பேரும் எம்.பி.,க்களாக உள்ளனர்.
latest tamil news


அசாம் மாநிலம் கவுஹாத்தியில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன், சிவசேனாவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கட்சியை உடைப்பதற்கு தேவையான 37 எம்.எல்.ஏ.,க்களை விட அதிகமானோர் தன்னிடம் உள்ளதாக ஏக்னாத் ஷிண்டே கூறியுள்ளார். இந்நிலையில், 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, கவுஹாத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.மஹாராஷ்டிரா சட்டசபையில், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், 40க்கும் மேற்பட்டோர் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இக்கட்சிக்கு, லோக்சபாவில் 19 பேரும், ராஜ்யசபாவில் மூன்று பேரும் எம்.பி.,க்களாக உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X