சென்னை:சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், ரயில் பாதைகளை ஒட்டி இருக்கும் தடுப்பு சுவர்கள் உடைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள குறுக்கு நுழைவு பகுதிகளை நீக்கக்கோரி, தெற்கு ரயில்வேயிடம் ரயில்வே பாதுகாப்பு படை பரிந்துரை செய்துள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் ரயில் பாதையை ஒட்டிள்ள பல்வேறு இடங்களில் சுற்றுச்சுவர்கள் உடைக்கப்பட்டு, சிறிய, சிறிய பாதைகளாக திறக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, சைதாப்பேட்டை, கிண்டி, சேத்துப்பட்டு, பெருங்களத்துார் உள்ளிட்ட இடங்களில், ரயில் நிலைய சுவர்கள் உடைக்கப்பட்டு, பாதைகளாக மாற்றியுள்ளனர்.
இந்த வழியாக ரயில் பாதைகளை கடந்து செல்வது, ரயில் பாதை அருகே அமர்ந்து கஞ்சா, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்கள், போதைக்காக ரயில் பயணியரிடம் மொபைல் போன், நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு, இந்த வழியாக தப்பி செல்கின்றனர்.எனவே, தேவையற்ற இந்த பாதைகளை நீக்கக் கோரி, ஆர்.பி.எப்., எனும் ரயில்வே பாதுகாப்பு படை தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:சில ரயில் நிலையங்கள் அருகே உள்ள தடுப்பு சுவர்களை இடித்து, சிறிய அளவில் பாதையை உருவாக்கி கொண்டு சிலர், வந்து செல்கின்றனர்.இந்த வழியாக வருவோர் ரயில் மோதி இறக்கின்றனர். குற்ற செயல்களில் ஈடுபட்டு, இந்த வழியாக தப்பி ஓடி விடுகின்றனர்.எனவே, ரயில் பாதை இறப்புகளை தடுக்க தேவையற்ற இந்த நுழைவு பாதைகளை மூடக்கோரி, தெற்கு ரயில்வேயிடம் பரிந்துரை அளித்துள்ளோம்.
இதன் அடிப்படையில், தேவையற்ற பாதைகளை நீக்கவும், தேவையாக இருந்தால் சிறிய அளவிலான சுரங்கபாதை அமைக்கவும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.