விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம்...அதிகரிப்பு!:வனம், வேளாண் துறை நடவடிக்கை தான் என்ன?;சேதமடைந்த பயிருக்கு நிவாரணம் தராததால் அவதி

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்டத்தில் வயல் வரப்புகளை காட்டுப்பன்றிகள் சீரழிப்பது அதிகரித்து வருவதால், விவசாயிகள் நிம்மதி இழந்துள்ளனர். சேதமடைந்த பயிருக்கு உரிய நிவாரணம் தராமல் வனத்துறை அலைக்கழிப்பதாக கூறும் அவர்கள், 'காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனம், வேளாண் துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில்

செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்டத்தில் வயல் வரப்புகளை காட்டுப்பன்றிகள் சீரழிப்பது அதிகரித்து வருவதால், விவசாயிகள் நிம்மதி இழந்துள்ளனர்.

சேதமடைந்த பயிருக்கு உரிய நிவாரணம் தராமல் வனத்துறை அலைக்கழிப்பதாக கூறும் அவர்கள், 'காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனம், வேளாண் துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம். திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் விவசாய நிலங்கள் உள்ளன.இவற்றில் நெல் மற்றும் மணிலா, கரும்பு, தர்பூசணி ஆகிய பயிரை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில், வனப்பகுதிகள் உள்ளன.


குறைந்தளவு பாதிப்பு
இந்த வனப்பகுதிகளில் மான், மயில், முயல் உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன. இந்த விலங்குகளால் விவசாயிகளுக்கு குறைந்தளவு பாதிப்பு ஏற்படும்.ஆனால் இரண்டு ஆண்டுகளாக, வனப்பகுதி, விவசாய நிலம் மற்றும் மரங்கள் வளர்ந்து அடர்த்தியாக உள்ள பகுதிகளில், காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த காட்டுப்பன்றிகளுக்கு, வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், விவசாயிகள் பயிரிடும் நெல், மணிலா, கரும்பு, தர்பூசணி ஆகியவற்றை உணவாக உண்ணுகின்றன.இந்த பன்றிகள், கூட்டமாக வந்து பயிர்கள் மீது நடப்பதாலும், வயலை சரமாரியாக தோண்டுவதாலும், 50 முதல் 70 சதவீதம் பரப்பிலான பயிர் சேதமடைகிறது.இந்த பன்றிகளை கட்டுப்படுத்த, வனத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டும் பயனில்லை.

மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லாததால், விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.இது குறித்து, மதுராந்தகம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் விவசாய சங்க செயலர் ஆர்.முரளிமோகன் கூறியதாவது:விவசாய நிலங்களில் மணிலா, தர்பூசணி, கரும்பு, நெல் ஆகியவற்றை, காட்டுப்பன்றிகள் அழித்து வருகின்றன.இதை கட்டுப்படுத்த, வனத்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். அவர்கள் துணிகள், தலைமுடிகள், மருந்துகள் தெளிக்க அறிவுரை வழங்குகின்றனர்.


பயிர் காப்பீடு
இவற்றை பயன்படுத்தினாலும் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.வனத்துறையினர் ரோந்து பணி சென்று, பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், வனத்துறையினர் நிவாரணம், குறைந்தளவே கிடைக்கிறது. அதனால், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.விவசாயிகள் கூறிதாவது:நிலங்களை காட்டுப்பன்றிகள் அழிப்பதை, வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆனால் கடந்தாண்டு, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டதில், இரண்டு விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கி உள்ளனர். வனம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இழப்பீடு வேண்டும்


திருக்கழுக்குன்றம் தாலுகாவில், விவசாய நிலங்களில் நெல் பயிர் சாகுபடி செய்து வருகிறோம். வனப்பகுதிகளில் உள்ள காட்டுப்பன்றிகள், நெல் பயிரை சேதப்படுத்துகின்றன. இரவில் தனியாக காவல் காக்கும்போது, தாக்கி செல்கின்றன. அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.- பி.திருநாவுக்கரசுகோரப்பட்டு, செங்கல்பட்டு

தொடர்பு எண் வெளியீடு!

செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பன்றி கழிவை, வரப்பு ஓரங்களில் போட்டு வைக்கலாம். மனித ரோமங்களை, வயல் ஓரம் துாவலாம்; பழைய புடவைகளை வேலியாக பயன்படுத்தலாம்.கந்தகம் மற்றும் எண்ணெய் கலந்த கலவையில் நனைத்த சணல் அல்லது தென்னை நார் கயிறு, ஓர் அடி இடைவெளியில் கட்டலாம்.மேளங்கள், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பலாம். ரசாயன மருந்துகளான 'ஈக்கோடான்' மற்றும் 'நீல்போ' மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
மேலும், தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், வேலுார் மாவட்டம், வரிஞ்சிபுரத்தில் வேளாண் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த நிலையம் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, உயிரியல் முறை காட்டுப்பன்றி விரட்டி உருவாக்கியுள்ளது. அதை தயாரித்து பயன்படுத்தினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ஆகியோரை 0416- - 2900 141- / 2900 142 / 2273 331 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.தவிர kvkviriniipuram@tnau.ac.in / arsvrm@tnau.ac.in என்ற மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X