மாமல்லபுரம்:சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28 முதல், ஆகஸ்ட் 10 வரை, மாமல்லபுரத்தில் உள்ள 'போர் பாயின்ட்ஸ்' விடுதியில் நடக்கிறது. 187 நாடுகளின் வீரர்கள் உள்ளிட்ட, 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இவ்விடுதி பகுதியில், வீரர்கள், மற்றவர்களின் வாகனங்கள் நிறுத்த, விடுதி அருகில், 10 ஏக்கர் தனியார் இடத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுகிறது.இப்பணியை, நிகழ்விட ஏற்பாடுகள் சிறப்பு அலுவலர் சங்கர், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் டி.ஐ.ஜி., சத்தியபிரியா, எஸ்.பி., சுகுணாசிங் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்தார்.
வாகன நிறுத்த பகுதியை சில அடிகள் உயர்த்தி,'பேபர் பிளாக்' தளமாக மேம்படுத்துவது.ஒவ்வொரு வாகன பரிசோதனையும், 20 - 30 வினாடிகள் நடக்கும் என்பதால், 2,000 வாகனங்களை விரைந்து பரிசோதித்து அனுமதிக்க, 10க்கும் மேற்பட்ட பாதைகள்; தலா 60 மீ., அகலத்தில் அமைப்பது.விடுதி தங்குமிட பகுதியில், காவல் துறை கட்டுப்பாட்டு அறை; சர்வதேச வீரர்களின் தனி மனித சுதந்திரம் பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்வது குறித்து, சிறப்பு அலுவலர் முடிவெடுத்தார்.
போட்டிக்கு குறுகிய காலமே உள்ளதால், இப்பணிகளை வேகமாக முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.செஸ் விளையாட்டிற்காக, விடுதி வளாகத்தில், 52 ஆயிரம் சதுர அடி பரப்பில், கூடுதல் அரங்கம் அமைக்கப்படுகிறது. தனியார் நிறுவனம், ஜெர்மானிய வடிவ அரங்கம் அமைக்கிறது.நேற்று மாலை 3:15 மணிக்கு, பெரிய உலோக பெட்டியை, கிரேனில் துாக்க முயன்றபோது, எதிர்பாராவிதமாக, அதன் ரோப் அறுந்து, உலோக பெட்டி விழுந்ததாக தெரிகிறது. கிரேன் அருகில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை அக்கரை - மாமல்லபுரம், 34 கி.மீ., கிழக்கு கடற்கரை சாலை, 2018ல், நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது.இதை கட்டண சாலையாக நிர்வகிக்கும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், மீடியனில் மலர் செடிகள், சாலையோரம் மரக்கன்றுகள் வளர்த்து பராமரிக்கிறது. பல இடங்களில் செடிகள் அழிந்து, இடைவெளியாக உள்ளது.
இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடக்கிறது. வெவ்வேறு பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும் சர்வதேச வீரர்கள், இச்சாலை வழியே, போட்டி நடக்கும் மாமல்லபுரம் விடுதி செல்வர்.அவர்களை கவரும் வகையில், சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர், மாமல்லபுரம்பூஞ்சேரி முதல், அக்கரை வரையிலான மீடியனில் அரளி, காகித பூ, போகன்வில்லா என, செடிகளை நடுகின்றனர். இவை பூத்து, வண்ண மலர்களாக வசீகரிக்கும்.