கிருஷ்ணகிரி,:ஓசூரில், 2.79 கோடி ரூபாய் கடனுக்கு, 13 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய பெங்களூரு நபர் மீது, 'சிப்காட்' போலீசார் கந்து வட்டி வழக்குப்பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சிப்காட் ஸ்டெப் ஹவுசிங் காலனியைச் சேர்ந்தவர் யுவராஜ், 38; சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.கடந்த 2018 ஜூலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு, அத்திப்பள்ளியைச் சேர்ந்த சிவப்பா ரெட்டியிடம், 2.79 கோடி ரூபாய் கடன் பெற்றார். இதற்காக, புரோநோட்டு, வங்கி காசோலை கொடுத்தார்.
கடந்த 2020 பிப்., வரை, 7.86 கோடி ரூபாயை வட்டியும், முதலுமாக கொடுத்துள்ளார். தான் கொடுத்த புரோ நோட்டு மற்றும் காசோலைகளை திருப்பித் தர கேட்டார்.தர மறுத்த சிவப்பாரெட்டி, மேலும் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். கோபமடைந்த யுவராஜ், ஓசூர் சிப்காட் போலீசில், சிவப்பா ரெட்டி மீது, கந்து வட்டி பிரிவில் புகார் கொடுத்தார். அந்த நபர் மீது போலீசார், கந்து வட்டி வழக்கு பதிந்துள்ளனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி, வெங்கடாபுரம் அதியமான் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 55. இவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரகு என்பவரிடம், 18 ஆயிரம் ரூபாயை கடந்த பிப்ரவரியில் கடனாக வாங்கியுள்ளார்.மாதம், 2,000 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். கூடுதல் வட்டி தருமாறு ரகு மிரட்டியுள்ளார். ஜெயச்சந்திரன் புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ரகு மீது கந்து வட்டி முறைகேடு சட்ட பிரிவில் வழக்கு பதிந்தனர்.
* போச்சம்பள்ளி, கோடிபதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அம்பிகா, 50; அதே பகுதியை சேர்ந்த இளவரசன், 38 - சித்ரா, 32, தம்பதியிடம், 2018ல், 1.10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதுவரை, 1 லட்சம் ரூபாய் வரை வட்டி செலுத்தியுள்ளார். எனினும் அந்த தம்பதி, வட்டியும், அசலுமாக 5.25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.அம்பிகா புகார்படி, இளவரசன், சித்ரா மீது, மத்துார் போலீசார், கந்துவட்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.இதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்பது கந்து வட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுஉள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.