மேட்டுப்பாளையம் : "விவசாய நிலங்களில் அன்னாசிப்பழம், நெல்லி பயிர் செய்தால், முட்கள் காரணமாக யானைகள் வருவது தடுக்க முடியும் என," தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா பேசினார்.
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள தோட்டத்தில், அறம் அங்கக வேளாண் உழவர்கள் உற்பத்தியாளர் குழுமம், அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். அறம் அங்கக குழுவின் நிதி இயக்குனர் ரங்கசாமி வரவேற்றார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா பேசுகையில், "தேனி வளர்ப்பு, சிப்பம் கட்டுதல், பண்ணை குட்டை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், பூக்கள் உற்பத்தி செய்தல், காய்கறி பந்தல் அமைத்தல் ஆகியவை அமைக்க, 25 சதவீதம் அரசு மானியம் வழங்குகிறது. விவசாய குழுவினர் இதை தொடங்கி, பயனடைய வேண்டும். மேலும் விவசாய நிலங்களில், முட்கள் உள்ள அன்னாசிப்பழம், நெல்லி ஆகியவற்றை பயிர் செய்வதாலும், பெட்டிகள் வைத்து தேனீக்கள் வளர்த்தாலும், விவசாய நிலங்களுக்கு யானைகள் வராது. எனவே யானைகள் வரும் பாதையில் இவற்றை பயிர் செய்தால், விவசாய பயிர்களை பாதுகாக்கலாம்," என்றார்.
கூட்டத்தில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை, சிறு குறு விவசாயிகள் தொடங்க வேண்டும் எனவும், அதற்கு அரசு மானியம் உள்ளது என, உழவர் உற்பத்தியாளர் குழுமத்தின் அலுவலர் சாந்தா ஷீலா தெரிவித்தார். வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் விவசாய குழு நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் வேலுசாமி நன்றி கூறினார்.