உதார் விடும் அரசு அலுவலர்கள்; ஹெல்மெட் அணியாவிடில் சிக்கல்| Dinamalar

உதார் விடும் அரசு அலுவலர்கள்; ஹெல்மெட் அணியாவிடில் சிக்கல்

Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (7) | |
கோவை : ''அரசு அலுவலர்கள் ஹெல்மெட் போடாமல் வந்தால், அவர்களை விட வேண்டாம்; அரசின் விதிகளை முதலில் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கே உள்ளது,'' என்று போலீசாரிடம், கோவை கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டம், கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பல்வேறு போக்குவரத்து, சாலை பிரச்னைகள் பற்றி
Helmet, Police, Govt Employees

கோவை : ''அரசு அலுவலர்கள் ஹெல்மெட் போடாமல் வந்தால், அவர்களை விட வேண்டாம்; அரசின் விதிகளை முதலில் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கே உள்ளது,'' என்று போலீசாரிடம், கோவை கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டம், கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பல்வேறு போக்குவரத்து, சாலை பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.தடாகம் ரோடு-லாலி ரோடு சந்திப்பில், மேம்பாலம் கட்டுவது தொடர்பான, நெடுஞ்சாலைத்துறை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதைத் தவிர்த்து, நகருக்குள் விபத்துக்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மாநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் பேசிய அதிகாரிகள், 'நகருக்குள் நடக்கும் பல்வேறு விபத்துக்களில், உயிரிழப்புக்கு ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுவதே காரணமென்பது தெரியவந்துள்ளது.எவ்வளவு அபராதம் விதித்தாலும், எத்தனை முறை எச்சரித்தாலும் பலரும் ஹெல்மெட் அணிவதேயில்லை. குறிப்பாக, அரசு அலுவலர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் வருகின்றனர். கேட்டால், அந்தத் துறை, இந்தத் துறை என்று கார்டை காண்பிக்கின்றனர்' என்றனர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய கலெக்டர் சமீரன், ''அரசு அலுவலர்களாக இருந்தாலும், அவரவர் உயிரைப் பாதுகாக்க, ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாமல், அரசுத்துறை அலுவலர் என்று யாராவது சொன்னால், அவர்களை விட வேண்டாம்.அரசு வகுத்துள்ள சாலை விதிகளை, மக்களுக்கு முன் மாதிரியாக சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது, ஒவ்வொரு அரசு அலுவலரின் கடமை. சாலை விதிகளை மதிக்காமல் யாராவது அரசு அலுவலர் என்று சொன்னால், அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.


latest tamil newsமேட்டுப்பாளையம் ரோட்டில், பெரிய நாயக்கன்பாளையம், ஜி.என்.மில்ஸ் பகுதிகளில் பாலங்கள் கட்டும் வேலை, மிகவும் மெதுவாக நடந்து வருவதால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக, கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக, சர்வீஸ் ரோடு மிகவும் மோசமாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர். அந்தப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய கலெக்டர், 'நாளை காலையே அங்கு ஆய்வு செய்கிறேன்' என்றார்.

டி.பி.,ரோட்டில் அதிநவீன சிக்னல்!

ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, திருவேங்கடசாமி ரோடு சந்திப்பில், சிக்னல் அகற்றப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பற்றியும், சாலை பாதுகாப்புக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அங்கு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மாதிரிச்சாலைக்காக, அலங்காரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாலும், சிக்னல் அமைக்க மாநகராட்சி எதிர்ப்புத் தெரிவித்ததாலும், சிக்னல் இல்லை என்று தகவல் தெரிவித்த போலீசார், புதிய மாநகராட்சி கமிஷனரின் ஒப்புதலுடன் அங்கு 'உயிர்' அமைப்பின் சார்பில், அதிநவீன சிக்னல் அமைக்கப்படவுள்ளதாக, தகவல் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X