திருப்பூர் : ''மான்கள் பயிர்களை கபளீகரம் செய்கின்றன; வெறிநாய்கள் கடித்து குதறி ஆடு, கன்றுகள் பலியாகின்றன'' என்று, விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கோட்டாட்சியர் பண்டரி நாதன் தலைமையில் நடந்தது.திருப்பூர், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி பகுதி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயிகளின் பிரச்னைகளை தெரிவித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார்: ஊத்துக்குளியில், புஞ்சை தளவாய்பாளையம், வடுகபாளையம், காவுத்தம்பாளையம், பல்லவராயன்பாளையம் கிராமங்களில், வெறிநாய் கடியால், ஆடு, கன்றுகள் உயிரிழக்கின்றன. விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஊத்துக்குளி, பொங்கலுார் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வரும் மான்கள், விவசாய பயிர்களை அழிக்கின்றன. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கவேண்டும்.
மான்களை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், வாரம்தோறும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும். அரசூர்,- ஈங்கூர் 440 கிலோ வாட் உயர் மின் கோபுர திட்டத்தால், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின்னரே பணிகள் மேற்கொள்ளவேண்டும். அப்போதைய சந்தை மதிப்பில், அந்த கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்கவேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி:பொங்குபாளையம் ஊராட்சி 1வது வார்டு, பரமசிவம்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே உள்ள குட்டையை துார்வாரி 40 ஆண்டுகளுக்குமேலாகிறது.
மரம், செடி கொடிகள் சூழ்ந்துள்ளன. மழைநீர் தேங்காமல் வழிந்தோடி வீணாகிறது. மரங்களை அகற்றிவிட்டு, குட்டையை துார்வாரவேண்டும்.கடந்த நான்கு ஆண்டுகளாக, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் இதுகுறித்து மனு அளித்துள்ளேன். கடந்த 2021, டிசம்பரில், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர், இந்த குட்டையை துார்வார 9.56 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மழை நீர் வடிந்தவுடன் துார்வாரப்படும் எனவும் கடிதம் அனுப்பினார்.மழை நீர் வற்றி நான்கு மாதமாகியும் குட்டையை துார்வார நடவடிக்கை எடுக்கவில்லை. பருவமழை துவங்கிவிட்டது. மேலும் தாமதிக்காமல், போர்க்கால அடிப்படையில் குட்டையை துார் வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தங்கள் பிரச்னைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்; கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.