அவிநாசி : அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட வார சந்தை மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம், நான்கு முறை நடத்தியும், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.அவிநாசி பேரூராட்சி கட்டுப்பாட்டில் வாரச்சந்தை, புதிய பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளன. இவற்றில் சுங்கம் வசூலிக்கும் உரிமை மூன்றாண்டு குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்படும்.முந்தைய ஆண்டு விடப்பட்ட ஏலத் தொகையை விட, அதிக தொகைக்கு தான் ஏலத்தொகையை
நிர்ணயிக்க முடியும் என்ற நிலையில், வாரச்சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமம், சராசரி குத்தகை மதிப்பாக, 7 லட்சத்து 23 ஆயிரத்து 814 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமம், சராசரி குத்தகை மதிப்பாக, 13 லட்சத்து 48 ஆயிரத்து 569 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த வரியினங்களுக்கான குத்தகை உரிமக்காலம், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அடுத்தடுத்து, 3 முறை ஏலம் விடப்பட்டும், ஏலத்தொகை அதிகம் என்பதால் யாரும் ஏலம் கோர முன்வரவில்லை.நேற்று, செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில், நான்காவது முறையாக ஏலம் கோரப்பட்டது.
வாரச்சந்தை சுங்கம் வசூல் ஏலத்தில், ஒருவர் மட்டும் பங்கெடுத்தார். அவருக்கு போட்டியாக, யாரும் ஏலம் கேட்காததால் ஏலம் நடத்தப்படவில்லை. சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் கோர யாரும் முன்வராததால், மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.இதற்கிடையில், பேரூராட்சி நிர்வாகமே, குத்தகை இனங்களில் வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்திருக்கிறது.
இவ்விவகாரத்தை கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, குத்தகை தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமாரிடம் கேட்ட போது, "குத்தகை எடுக்க யாரும் முன்வராதது குறித்து, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.