கோவை, : பி.காம்., படிப்புக்கு மாற்றான டி.காம்., படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பி.காம் படித்தால் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் இப்படிப்புக்கு எப்போதும் மவுசு உள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலில் நிரம்பும் துறையாக பி.காம்., உள்ளது. போட்டி அதிகம் என்பதால், பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும் நிலை உள்ளது.
பி.காம்., படிப்புக்கு மாற்றாக உள்ள டி.காம்., என்ற வணிகவியல் டிப்ளமோ, டி.காம்.,(சி.ஏ.,) ஆகிய படிப்புகள் மாணவர்களின் கனவை மெய்ப்பிக்கிறது. தற்போது அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு, இப்படிப்பு வழங்கப்படுகிறது. மூன்றாண்டு வணிகவியல் டிப்ளமோ படிப்புகள், பாலசுந்தரம் ரோட்டில் செயல்படும் கோவை அரசினர் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது.இதுதவிர, சென்னை தரமணியில் உள்ள மாநில வணிகவியல் பயிலக கல்லூரி, நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை டாக்டர் தர்மாம்பாள் அரசின் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது.
இதில், பி.காம்., பாடத்துக்கு இணையான பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. ஆண்டு கட்டணம் ரூ.2,500 க்கும் குறைவாக இருக்கும். டி.காம்., டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் நேரடியாக கல்லூரிகளில் பி.காம்., இரண்டாம் ஆண்டு சேரலாம்.பி.காம்., பட்டம் பெற நினைக்கும் மாணவர்கள், பத்தாம் வகுப்புக்கு பின் பிளஸ்1, பிளஸ்2 படிக்காமல், நேரடியாக பி.காம்., படிப்பில் முன்னணி கல்லூரிகளில் சேர முடியும்.கல்லூரிகளில் டி.காம்., படித்த மாணவர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.பிரகதி திட்டத்தில் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் வரை தகுதியுள்ளவர்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு, 94444 -39493, 90430 -23344 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.