கோவை : குமரகுரு கல்லுாரியில் நடந்த ஆசிய அளவிலான வலுதுாக்கும் போட்டியில், கோவை கல்லுாரி மாணவர்கள் மூன்று பதக்கங்கள் வென்று அசத்தினர். தமிழ்நாடு வலுதுாக்கும் சங்கம் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய, ஆசிய அளவிலான வலுதுாக்கும் போட்டி, குமரகுரு கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இப்போட்டியில், ஓமன், ஜப்பான், இலங்கை, நேபாளம், இந்தியா, சீனா என பல்வேறு நாடுகளில் இருந்து, 197 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் மூத்தோர் ஆகிய மூன்று பிரிவுகளில், வீரர்களுக்கான 53, 59, 66, 74, 83, 93, 105, 120, 120 +, வீராங்கனைகளுக்கான, 43, 47, 52, 57, 63, 69, 74, 84, 84+ ஆகிய எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.இதில் 'சப் ஜூனியர்' 66 கிலோ எடைப்பிரிவில், ராமகிருஷ்ணா பப்ளிக் பள்ளி மாணவர் கேசவ் கார்த்திக், ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் மூன்றிலும் சேர்த்து, 332.5 கிலோ எடை துாக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
இதே போல், ஜூனியர் 74 கிலோ பிரிவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவர் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் மூன்றிலும் சேர்த்து, 620 கிலோ துாக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். பெண்கள் பிரிவில், பி.எஸ்.ஜி., கல்லுாரி மாணவி, மோகனபிரியா, சீனியர், 52 கிலோ பிரிவில், 355 கிலோ எடை துாக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.ஆசிய அளவிலான போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளி என் மூன்று பதக்கங்கள் வென்ற கோவை மாணவர்களை பயிற்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்த்தினர்.