வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில், சாலையோர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, பிரதான சாலைகளில் போக்குவரத்துநெரிசலுக்கு தீர்வு காண்பதுடன், மாநகராட்சி வருவாயும் கிடைக்கும் என, அதிகாரிகள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் படி, தற்போது 17 இடங்களில் கட்டண வாகன நிறுத்தங்கள் செயல்படும் நிலையில், அதன் எண்ணிக்கையை 80 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சொந்த தேவைக்காக, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துஉள்ளது.
வாகன பெருக்கம் அதிகரித்த அளவுக்கு, குடியிருப்பு பகுதிகளிலும், பிரதான சாலைகளை ஒட்டிய வணிக நிறுவனங்களிலும், போதிய வாகன நிறுத்த வசதி இல்லாததால், அவற்றை சாலையோரங்களில் நிறுத்தும் நிலை நீடிக்கிறது.போக்குவரத்து நெரிசல்பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலலை தவிர்க்க, மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அதன் படி, தி.நகர் பாண்டிபஜாரில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொழுது போக்கு மையங்கள், திரையரங்குகளிலும், போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் அவை அமைந்துள்ள பகுதிகளை ஒட்டிய சாலைகளில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால், பிரதான சாலைகளில், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சென்னை மாநகராட்சியில், 2019ம் ஆண்டு 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதியாக, 471 சாலைகள் கண்டறியப்பட்டன. இத்திட்டத்தை செயல்படுத்த, 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
முதற்கட்டமாக, அண்ணாநகர், பெசன்ட்நகர், புரசைவாக்கம், தி.நகர், வாலாஜா சாலை உள்ளிட்ட, 17 சாலைகளில் இத்திட்டம் துவங்கியது.இதில், 5,532 கார்கள் நிறுத்தவும், 20 சதவீத இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும், மீதமுள்ள இடத்தில், இதர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், இருசக்கர வாகனம் நிறுத்த, ஒரு மணி நேரத்திற்கு, 5 ரூபாய் மற்றும் கார்களுக்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பொதுமக்கள், 'ஜி.சி.சி., ஸ்மார்ட் பார்க்கிங்' என்ற செயலி வழியாக, மொபைல் எண், வாகன எண்ணை பதிவேற்றம் செய்து, அருகில் காலியாக உள்ள வாகன நிறுத்தும் இடங்களை கண்டறியும் வசதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டம் முழுமை பெறாமல் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு மற்றும் இதர துறைகள் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால், திட்டத்தை முழு வீச்சுடன் செயல்படுத்த முடியாமல், மாநகராட்சி திணறியது.இந்நிலையில், இத்திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து, அதை தீவிரமாக செயல்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
80 முக்கிய இடங்கள்
இத்திட்டத்திற்கு புத்துயிர் அளிப்பதன் வாயிலாக, சென்னையில் நிலவும் வாகன நிறுத்த பிரச்னை, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைப்பதுடன், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும் என்பதால், இது தொடர்பான, ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இத்திட்டத்தை, திருவல்லிக்கேணி, எழும்பூர், மெரினா, என்.எஸ்.சி., போஸ் சாலை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வடபழநி, தேனாம்பேட்டை, அம்பத்துார், உள்ளிட்ட இடங்களில் 80 முக்கிய இடங்களில் செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மாநகராட்சியில் வருவாயை அதிகரிக்கவும், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க முடிவு செய்து, ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் நடைமுறைக்கு வந்தது. கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. ஏற்கனவே, 17 இடங்களில் இத்திட்டம் செயல்படுகிறது. தற்போது இத்திட்டத்தை 80 இடங்களில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாநகராட்சி வருவாய்த்துறையிடம், இத்திட்டம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.