கோவை : தமிழக அரசின் உத்தரவை மீறி, 37 ஆயிரத்து 984 அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தணிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில், 5 சவரனுக்கு உட்பட்டு பெறப்பட்டிருந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர், கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோர் மற்றும் குடும்பத்தினர், ஓய்வூதியர்களுக்கு இச்சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், அரசு ஊழியர்கள், குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, நகைக்கடன் தள்ளுபடியை பலர் பெற்றிருக்கின்றனர்.
கடன்தாரர்களின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு எண் உள்ளிட்டவற்றை பெற்று, தணிக்கைக்கு உட்படுத்தினர். அப்போது, 37 ஆயிரத்து, 984 அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர், நகைக்கடன் தள்ளுபடி பெற்றது தெரியவந்தது. இவர்கள், எந்த அரசு அலுவலகத்தில், என்ன பொறுப்பில் பணிபுரிகிறார்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஊழியர் பெயர், அரசு ஊழியருக்கான எண், வகிக்கும் பதவி, தற்போது பணிபுரியும் துறை, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் எண், கடன் அசல் தொகை, வட்டி என, பெயர்களுடன் அறிக்கை தயாரானது.இவர்களுக்கு, அரசு உத்தரவுக்கு மாறாக, முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், தள்ளுபடி செய்ததை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மண்டல கூட்டுற இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.கடன் பெற்றிருந்தவர்கள் பட்டியலை ஆய்வு செய்தபோது, தாசில்தார், துணை தாசில்தார், பி.டி.ஓ., பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்வி பிரிவு ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பலரும், போலீசாரும் தள்ளுபடி பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
கூட்டுறவு சங்க இணை பதிவாளர்களில் ஒருவர் கூறுகையில், 'கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில், அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் பெற்றிருக்கும் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 'அதன்படி, ரத்து செய்யப்படும். இனி, அசல் மற்றும் வட்டியுடன் கடன் தொகை அவர்களிடம் வசூலிக்கப்படும். நகையை திரும்ப பெற்றிருந்தாலும், அரசு ஊழியர்கள் என்பதால், கடன் தொகையை வசூலிக்க முடியும்' என்றார்.