செய்திகள் சில வரிகளில் தர்மபுரி| Dinamalar

செய்திகள் சில வரிகளில் தர்மபுரி

Added : ஜூன் 24, 2022 | |
சித்தேரி பள்ளி 94 சதவீதம் தேர்ச்சிஅரூர்: பிளஸ் 2 தேர்வில், அரூர் அடுத்த சித்தேரி அரசு உறைவிட மேல்நிலைப்பள்ளி, 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய, 50 பேரில், 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வில் இப்பள்ளி, 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சிட்லிங் அரசு உறைவிட உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு தேர்வில், 96 சதவீதம் தேர்ச்சி

சித்தேரி பள்ளி 94 சதவீதம் தேர்ச்சி
அரூர்: பிளஸ் 2 தேர்வில், அரூர் அடுத்த சித்தேரி அரசு உறைவிட மேல்நிலைப்பள்ளி, 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய, 50 பேரில், 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வில் இப்பள்ளி, 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சிட்லிங் அரசு உறைவிட உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு தேர்வில், 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
நலத்திட்ட உதவி வழங்கல்
கிருஷ்ணகிரி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 99வது பிறந்தநாளையொட்டி ஓசூர் சமத்துவபுரம் எதிரிலுள்ள அபாலா ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை ஓசூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ் வழங்கினார். பின் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஏற்பாட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் முனிரத்தினம்மா செய்திருந்தார்.
மாணவர்களுக்கு ஓவிய போட்டி
அரூர்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஓவிய போட்டி நேற்று நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை, மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அரூர் டவுன் பஞ்., சார்பில் நடந்த போட்டியில், 6 முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தாசில்தார் பொறுப்பேற்பு
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி தாசில்தாராக பணியாற்றிய இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலகம், பறக்கும் படை பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த போச்சம்பள்ளி தாசில்தார் பணியிடத்திற்கு, பர்கூர் தாசில்தாராக பணியாற்றிய பிரதாப் நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
விதைப்பண்ணையில் ஆய்வு
காரிமங்கலம்: காரிமங்கலம் கொண்டசாமனஹள்ளி மற்றும் குட்டக்காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள பாசிப் பயறு கோ-8 ஆதார நிலை மற்றும் சான்று விதைப்பண்ணைகளில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் சிவசங்கரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பஸ்சுக்கு காத்திருந்தவர் சாவு
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அடுத்த நாகசந்திரத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 46, பெட்டி கடை வைத்துள்ளார். கடந்த, 21ல் ஓசூருக்கு சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வீடு திரும்ப, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தவர், திடீரென மயங்கி விழுந்து இறந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
மனநலம் பாதித்தவர் விபரீதம்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அடுத்த மரியகவுண்டபள்ளியை சேர்ந்தவர் ராமையா, 57, விவசாயி; சற்று மனநலம் பாதித்தவர். கடந்த, 5 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத விரக்தியில், கடந்த, 21ல் தன் வீட்டருகில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபட் கவிழ்ந்து தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனுசாமி, 65, கூலித்தொழிலாளி. இவர், டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் கடந்த, 19ல் இரவு, 7:45 மணிக்கு ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் சாம்ராஜ் நகர் அருகே வந்தபோது மொபட் கவிழ்ந்தது. படுகாயமடைந்த முனுசாமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாகனம் மோதி மூதாட்டி சாவு
கிருஷ்ணகிரி: சூளகிரி அடுத்த சென்னப்பள்ளியை சேர்ந்த மூதாட்டி வெங்கடம்மாள், 80; நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு சுண்டகிரி பஸ் ஸ்டாப் அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் வெங்கடம்மாள் மீது மோதியதில் இறந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
29 பேர் மீது வழக்கு
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் சி.பி.எம்., மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில், இக்கட்சியை சேர்ந்த, 29 பேர், 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி டவுன் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட, 29 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நினைவஞ்சலி நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி: பாரதிய ஜன சங்கத்தை நிறுவனரும், அதன் முதல் அகில இந்திய தலைவருமான ஷியாம் பிரசாத் முகர்ஜியின், 69வது நினைவு தினத்தையொட்டி கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டில் அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கெலமங்கலம் மேற்கு ஒன்றிய, பா.ஜ., தலைவர் சந்துரு, நெசவாளர் பிரிவு, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சி.பி.எம்., ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: மத்திய அரசின், 'அக்னிபத்' திட்டத்தை உடனடியாக கைவிட கோரி, ஓசூர் ராம்நகரில் நேற்று மாலை, சி.பி.எம்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆந்திரா தக்காளி ரூ.18க்கு விற்பனை
பாலக்கோடு, ஜூன் 24-
பாலக்கோட்டில் உள்ளூரில் விளையும் தக்காளி ஒரு கிேலா, 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் ஆந்திரா மாநில விவசாயிகள் அறுவடை செய்த தக்காளியை, சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து, பாலக்கோடு மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிலோ, 15 முதல், 18 ரூபாய் என விற்பனை செய்கின்றனர்.
ஆர்ப்பாட்டம்
பெரும்பாலை, ஜூன் 24-
பெரும்பாலை பஞ்.,ல் 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பணி வழங்குவதாக கூறி, சோளிகவுண்டனுார் ஏரியில், பணியை புறக்கணித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பஞ்., தலைவி கஸ்துாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், '100 நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு குறைந்தளவே பணி கொடுக்கின்றனர். அதிலும் பணம் முழுவதுமாக கிடைப்பதில்லை' என்றனர்.
பெண்ணிடம்
8 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணகிரி, ஜூன் 24-
மொபட்டில் வந்த பெண்ணிடம், பைக்கில் வந்த கொள்ளையர்கள் இருவர், எட்டு பவுன் நகையை பறித்துச்சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பாசிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் விஜயா, 30; இவர் நேற்று முன்தினம் பர்கூர் வந்துள்ளார். மதியம், 2:15 மணியளவில் டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் அவரது சகோதரி செல்வியுடன் வீட்டிற்கு திரும்பினார். கொண்டப்பநாயனப்பள்ளி அருகே, அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், விஜயாவின் கழுத்திலிருந்த, எட்டு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். விஜயா புகார்படி பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி அடித்து கொலை
மனைவி, மகள் கைது
கிருஷ்ணகிரி, ஜூன் 24-
சூளகிரி அடுத்த சுண்டட்டியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 50, விவசாயி; இவரது மனைவி யசோதா, 42; இவர்களது மகள் சுஷ்மிதா, 25; இவர் திருமணமாகி அத்திப்பள்ளியில் வசிக்கிறார். குடிப்பழக்கமுள்ள வெங்கட்ராஜ், நேற்று முன்தினம் பால் சொசைட்டிக்கு சென்று வந்த யசோதாவை ஆபாசமாக பேசியுள்ளார். அப்போது ஊரிலிருந்து வந்த மகள் சுஷ்மிதா அவரை கண்டித்துள்ளார். மேலும் குடிபோதையில் ஏன் இப்படி தகராறு செய்கிறாய் எனக்கேட்டு, யசோதாவும், சுஷ்மிதாவும் சேர்ந்து வெங்கட்ராஜை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். வெங்கட்ராஜின் தங்கை ரத்தினம்மா, 48, புகார்படி, சூளகிரி போலீசார் யசோதா, சுஷ்மிதா இருவரையும் கைது செய்தனர்.
மான் வேட்டையாடியவர் கைது
அரூர், ஜூன் 24-
மொரப்பூர் சந்தைமேட்டில், நேற்று முன்தினம் மதியம், 2:15 மணிக்கு, கீழ்மொரப்பூர் வனக்காப்பாளர் பெரியசாமி அந்த வழியாக வந்த ஹோண்டா ஷைன் பைக்கை ஓட்டி வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒரு பிளாஸ்டிக் சாக்குபையில் மான் இறைச்சி இருந்தது. மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அவர் எட்டிப்பட்டியை சேர்ந்த சக்திவேல், 27, என்பதும் இரண்டு மான்களை வேட்டையாடியதும் தெரிந்தது. அவரை கைது செய்து பைக், கம்பி வலை மற்றும் மான் இறைச்சி ஆகியவற்றை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இன்று விவசாயிகள்
குறைதீர் கூட்டம்
தர்மபுரி, ஜூன் 24-
தர்மபுரியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூடுதல் கூட்ட அரங்கில் இன்று காலை, 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, இதில் கலந்து கொண்டு வேளாண் தொடர்பான தங்களது கோரிக்கை, கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X