உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதல் முறையாக அதிபர் புடின் சர்வதேச மாநாடான பிரிக்சில் பங்கேற்று பேசினார். அப்போது ரஷ்யாவில் இந்திய சங்கிலித் தொடர் பல்பொருள் அங்காடிகளை திறக்க விவாதித்து வருவதாக கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு பிரிக்ஸ் எனப்படுகிறது. அனைத்து வளரும் நாடுகளுக்கு இருக்கும் பொதுவான பிரச்னைகளை விவாதிப்பதற்கு ஒரு தளமாக இது உள்ளது. இந்த பலதரப்பு அமைப்பை சீர்திருத்த வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன. தற்போது 14வது பிரிக்ஸ் மாநாடு சீனா தலைமையில் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீனா அழைப்பின் பேரில் பங்கேற்றார்.
![]()
|
தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடினும் பிரிக்ஸ் மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது: பிரிக்ஸ் நாடுகளிடையே ரஷ்யாவின் பங்கேற்பு வளர்ந்து வருகிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ரஷ்ய நாடுகளுக்கு தனது வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை மாற்றும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. பிரிக்ஸ் குழுவில் உள்ள நாடுகளுக்கு வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கான வழிகளை மாற்றியமைக்கும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. ரஷ்ய சந்தையில் சீன கார்களின் இருப்பை அதிகரிப்பது மற்றும் இந்திய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளை திறப்பது போன்றவை குறித்தும் விவாதித்து வருகிறோம்.
![]()
|
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் சுயநல நடவடிக்கைகளுக்கு எதிராக பிரிக்ஸ் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நேர்மையான மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே உலகப் பொருளாதாரத்தில் உருவாகியுள்ள நெருக்கடியான சூழலில் இருந்து வெளியேறும் வழிகளை கண்டடைய முடியும். சில நாடுகள் தங்களின் நிதி இயந்திரத்தை சுயநல நடவடிக்கைக்காக பயன்படுத்துகிறது. அவர்கள் உண்மையில் தங்கள் சொந்த பொருளாதார தவறுகளை மற்ற நாடுகளுக்கும் மாற்றுகிறார்கள். இது போன்ற பிரச்சினைகளை நாம் ஒன்றாக தான் தீர்க்க முடியும் என பலமுறை கூறியுள்ளோம். இவ்வாறு கூறினார்.