ஆர்.கே.பேட்டை:கிராமங்களை இணைக்கும் தார் சாலை, பராமரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜாநகரம் மேற்கு கிராமத்தினர், அருகில் உள்ள அம்மையார்குப்பம் கிராமத்திற்கு, பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்று வருகின்றனர். ராஜாநகரம் மேற்கு கிராமத்தில் இருந்து, காண்டாபுரம் வழியாக, தார் சாலை வசதி உள்ளது.
அம்மையார்குப்பத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில், பெரும்பாலானோர் கணக்கு துவங்கி, பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், அம்மையார்குப்பத்தில் இருந்து, உரம், விதைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.
ராஜாநகரத்தைச் சேர்ந்த மாணவர்கள், அம்மையார்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினரும், இந்த சாலை வழியாக தினமும் அம்மையார்குப்பத்திற்கு வந்து செல்கின்றனர்.
இச்சாலை நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால், தற்போது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.மாணவர்கள், விவசாயிகள் நலன் கருதி, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.