வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை-கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், கைதான எட்டு பேரின் முன்ஜாமின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவித்து, வரும் காலங்களில் இதுபோல விமர்சித்து பேச மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
![]()
|
ஹிஜாப் எனப்படும் முஸ்லிம் பெண்கள் அணியும், முழு உடலையும் மறைக்கும் உடை அணிய மாணவர்களுக்கு அனுமதியில்லை என, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.இதை கண்டித்து, மார்ச் 17ல் மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற முஸ்லிம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா, நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
அவர் மீதும், அமைப்பின் மதுரை துணைச் செயலர் அசன் பாட்ஷா, மாவட்ட செயலர் ஹபிபுல்லா ஆகியோர் மீதும் தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.மார்ச் 19ல் ரஹமத்துல்லா கைதானார். மே 6ல் உயர்நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது.இதையடுத்து, அசன் பாட்ஷா, ஹபிபுல்லா முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
இதுபோல, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தவ்ஹீத் ஜமாத் என்ற அந்த அமைப்பின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் அல்மாலிக் பைசல், செய்யது நைனா, யாசர் அராபத், சீனி உமர் காதர், அல்தாப் உசேன் ஆகியோர் மீது திருவாடானை போலீசார் வழக்குப் பதிந்தனர்.அவர்களும் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
![]()
|
மேலும், திருநெல்வேலி, மேலப்பாளையம் போலீசார் பதிந்த வழக்கில், ரபி என்பவரும் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர் நேற்று பிறப்பித்த உத்தரவு:நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவித்து, வரும் காலங்களில் இதுபோல பேச மாட்டோம் என மனுதாரர்கள் உத்தரவாதம் அளித்து, ஜூன் 29ல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement