வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : ''நீங்கள் அமைச்சர்; உங்கள் மகன் எம்.பி., ஆனால், என் மகன் மட்டும் அரசியலில் ஈடுபட்டு வளர்ச்சியடையக் கூடாதா,'' என, ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள அமைச்சர் ஏக்னாத் ஷிண்டேவுக்கு, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். அவருடன், 40 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில்இவர்கள் தங்கியுள்ளனர். 'தேசியவாத காங்., - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டும்' என, சிவசேனா தலைமையை, அதிருப்தி எம்.எல்,.ஏ.,க்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் சிவசேனா நிர்வாகிகளுடன், முதல்வர் உத்தவ் தாக்கரே, 'வீடீயோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று பேசியதாவது:மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசு உடனே கவிழ்ந்துவிடும் என, பா.ஜ., எதிர்பார்த்தது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி நீடித்து வருகிறது. இதனால், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இதற்கு, ஏக்னாத் ஷிண்டே துணை போயுள்ளார். நகர்ப்புற வளர்ச்சித்துறை, முதல்வரிடம் இருப்பது தான் வழக்கம். ஆனால், அந்தத் துறையை ஷிண்டேவுக்கு வழங்கினேன். ஆனால், அந்த நன்றி அவருக்கு இல்லை. அரசு பங்களாவிலிருந்து நான் வெளியேறியது, முதல்வர் பதவி மீது எனக்கு ஆசையில்லை என்பதை தெரிவிக்கத்தான். ஆனால், போராட்ட குணத்தை ஒரு போதும் கைவிட மாட்டேன். ஷிண்டேவின் மகனை எம்.பி.,யாக்கியது சிவசேனா தான். அவர் மகன் எம்.பி.,யாக இருக்கலாம். என் மகன் ஆதித்யா மட்டும், அரசியலில் வளர்ச்சியடையக் கூடாதா?தைரியம் இருக்கிறது என்றால், பாலாசாஹேப் மற்றும் சிவசேனாவின் பெயரை பயன்படுத்தாமல், ஷிண்டே மக்களிடம் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ''21 எம்.எல்.ஏ.,க்கள் கவுஹாத்தியிலிருந்து எங்களோடு பேசி வருகின்றனர். அவர்கள் மும்பை திரும்ப விரும்புகின்றனர். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், நிச்சயம் வெற்றி பெறுவோம்,'' என்றார்.
சரத்பவார் சந்திப்பு
இதற்கிடையே, மும்பையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.'கூட்டணி அரசை பாதுகாக்க, தேசியவாத காங்கிரஸ் துணை நிற்கும்' என, உத்தவ் தாக்கரேவிடம் அவர்கள் உறுதிஅளித்தனர்.
'உண்மையான சிவசேனா'
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் தங்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:என் தலைமையில் உள்ள குழு தான், உண்மையான சிவசேனா. அதனால், தகுதி நீக்கம் செய்வோம் என, எங்களை யாரும் மிரட்ட முடியாது. சட்டசபை தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க மட்டுமே, எம்.எல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும்; கட்சி கூட்டங்களுக்கு உத்தரவிட முடியாது. எங்களுடன், பா.ஜ., தலைவர்கள் யாரும் பேசவில்லை; தொடர்பும் கொள்ளவில்லை. இவ்வாறு ஷிண்டே கூறினார்.