சென்னை--தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.சில ஆண்டுகளாகவே, விஜயகாந்த் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வந்த அவருக்கு, நீரிழிவு நோய் காரணமாக, கால்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. வலது காலில் உள்ள மூன்று விரல்கள், கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், 10 நாட்களுக்கு முன்பு, அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காலில் உள்ள மூன்று விரல்களை அகற்ற முடிவெடுத்தனர். அதன்படி, சமீபத்தில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டன.மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினார்.
ஆனாலும், அவரால் முன்புபோல் நடக்க முடியாது என்பதால், வீட்டிலேயே சிகிச்சையை தொடரும் வகையில், அவரது படுக்கை அறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மொபைல் போன் வாயிலாக, அவரது மனைவி பிரேமலதாவிடம் கேட்டறிந்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினி உள்ளிட்டோர், விஜயகாந்தை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.