வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை தி.மு.க., ஆதரிக்க முடிவு செய்துள்ளது. வேட்பு மனுத் தாக்கலின்போது, அவரை தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு முன்மொழிய உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ., வேட்பாளர் திரவுபதி முர்மு, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக, காங்., - திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தி உள்ளன. அவர், வரும் 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

அவரை முன்மொழிவதற்காக, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் லோக்சபா குழு தலைவர் டி.ஆர்.பாலு டில்லி செல்கிறார். தன் முதற்கட்ட பிரசாரத்தை யஷ்வந்த் சின்ஹா, ஜார்க்கண்ட், பீஹார் மாநிலங்களில் முடித்து விட்டு, அடுத்த மாதம் முதல் வாரம் தமிழகம் வருகிறார். முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்ட உள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.