கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகள் மற்றும் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கலெக்டர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் பயிர் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் வரத்து வாய்க்கால்கள், ஓடைகள் போன்றவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு கூட்டத்திலும் ஏரிகள், நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகளும் கோரிக்கை மனுவுடன் புகார் தெரிவிக்கின்றனர். அந்த சமயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அதன்பின் நடவடிக்கை எடுப்பதில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகராஜபுரம் கிராம வி.ஏ.ஓ.,வின் உதவியாளர், கிராம மக்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பம் செய்தால், லஞ்சம் அளித்தால் மட்டுமே செய்ய முடியும் என கூறுகிறார்.சூளாங்குறிச்சி - பல்லகச்சேரி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று வரும் வழியில் உள்ள புறம்போக்கு இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.அதேபோல், சூளாங்குறிச்சியில் பல இடங்களில் டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் மற்றும் மின் கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரஞ்சரம் பகுதியில், கோமுகி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுப்பவர்கள், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அதிகளவில் பள்ளம் தோண்டி மண் எடுக்கின்றனர்.
இதனால், மழைக் காலங்களில் ஏரிகளில் தண்ணீர் நிரம்பும் போது சில நேரங்கில் மனித உயிரிழப்புகள், கால்நடை இறப்பு சம்பவம் நிகழ்கிறது.இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, ஏரியில் சரிசமமாக வண்டல் மண் எடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்களில், காட்டுப்பன்றிகள் உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் ஓடைகளில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவையான இடங்களில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், புகார்களையும் தெரிவித்தனர்.விவசாயிகளின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) விஜயராகவன், நிலம் (ஹிஜிதா பேகம்), ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மின்வாரிய செயற் பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.