விழுப்புரம் : விழுப்புரத்தில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான மேம்பாட்டுத் திறன் பயிற்சிக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:தமிழக முதல்வர் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடுன் நான் முதல்வன் திட்டம் துவக்கியுள்ளார்.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், இளைஞர்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கும் வகையில், அரசுத் துறையின் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இளைஞர்கள் அதிக அளவு வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகளவு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ள நரிக்குறவர், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை வழங்க வேண்டும்.தமிழக கட்டுமானக் கழகம் மூலம் விருப்பம் உள்ள தொழிலாளர்களைக் கண்டறிந்து திறன் பயிற்சி வழங்க தொழிலாளர் துறை அலுவலர்கள் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான பயிற்சி வழங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட திறன் பயிற்சித்துறை உதவி இயக்குனர் நடராஜ், ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார் உட்பட பலர்பங்கேற்றனர்.